துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆகவும், அதைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அடுத்தடுத்த தொடர் நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.
இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதி, சிரியாவின் வடக்குப் பகுதி மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கினர்.
சனிக்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில், துருக்கியில் 39,672 பேரும், சிரியாவில் 5,800 பேரும் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் முன்னாள் முன்னணி வீரர் கானாவை சேர்ந்த கிறிஸ்டியன் அட்சு மாயமானதாக தகவல்கள் வெளியானது.
இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்காக மக்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 18) கட்டிட இடுபாடுகளில் இருந்து கானாவை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
“இடிபாடுகளில் இருந்து கிறிஸ்டியன் அட்சுவின் சடலத்தை மீட்டுள்ளோம். இன்னும் ஏராளமான உடல்கள் இடிபாடுகளில் இருந்து எடுத்து வருகிறோம். அவரது மொபைல் போனும் இடிபாடுகளில் இருந்து கிடைத்துள்ளது.” என்று செல்சி அணியின் மேலாளர் முராத் கூறினார்.
துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 11 நாட்களுக்கு மேலாகியும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
கலை.ரா
2வது டெஸ்ட் : திணறிய முன்னணி வீரர்கள்… கரைசேர்த்த ஆல்ரவுண்டர்கள்!
தமிழ்நாட்டிற்கு ரூ. 1201 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு!