இந்தியாவின் 19 வயதுக்குட்பட்ட மகளிர் அணி வீராங்கனை திரிஷா டி20 போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான டி 20 உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் இந்திய அணி மோதியது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து இந்தியாவை பேட் செய்ய கேட்டுக் கொண்டது. தொடக்க வீராங்கனைகளாக கமலினியும் திரிஷாவும் களம் இறங்கினர்.
பவர் பிளே முடியும் போது, இந்தியா அணி 67 ரன்களுக்கு விக்கெட் இழக்காமல் இருந்தது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 104 ரன்களை எடுத்திருந்தது. விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஸ்காட்லாந்து வீராங்கனைகள் தடுமாறி கொண்டிருந்தனர். இந்தியா 147 ரன்களை எட்டிய போது கமலினி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது, இந்த உலகக் கோப்பை தொடரில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.
தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய திரிஷா 53 பந்துகளில் சதத்தை கடந்தார். மொத்தம் 59 பந்துகளில் 110 ரன்களை திரிஷா எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதில், 13 பவுண்டரிகளும் 4 சிக்சர்களும் அடங்கும். 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 208 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து , விளையாடிய ஸ்காட்லாந்து அணி 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.