மெல்பர்னில் டிராவிஸ் ஹெட் செய்தது என்ன? சித்து காட்டமான பின்னணி!

Published On:

| By Kumaresan M

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியவுடன் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், ஆபாசமான முறையில் செய்கை காட்டி 150 கோடி இந்திய மக்களை அவமானப்படுத்தி விட்டதாக சித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மெல்பர்னில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் ரிஷப் பண்ட், டிராவிஸ் ஹெட் பந்து வீச்சில் தேவையில்லாத ஒரு ஷார்ட் ஆடி அவுட் ஆனார். அப்போது. டிராவிஸ் ஹெட், ஆபாசமான முறையில் ஒரு செய்கை செய்தார். டிராவிஸ் ஹெட் செயல் லட்சக்கணக்கான ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து,

‘டிராவிஸ் ஹெட்டின் இந்த கீழ்த்தரமான செயல் கண்டிக்கத்தக்கது.ஜென்டில்மேன் விளையாட்டின் பெயரை கெடுக்கும் அளவுக்கு டிராவிஸ் ஹெட் செயல்பட்டுள்ளார். குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் இந்த போட்டியை பார்க்கிறார்கள். அவர்களுக்கு முன்பு இப்படி செய்யலாமா? இது தனிப்பட்ட வீரருக்கு எதிரான அநாகரிக செயலாக கருத முடியாது. 150 கோடி இந்தியர்களை ஹெட் அவமானப்படுத்தியுள்ளார். ஹெட் மீது ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ், எப்போதெல்லாம் விக்கெட் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் இதை செய்வார். இது ஒரு நகைச்சுவைக்காக செய்யப்பட்ட செயல் என்று கம்மின்ஸ் கூறியுள்ளார்.

டிராவிஸ் ஹெட் கூறுகையில், இலங்கையில் நடந்த போட்டியின் போது விக்கெட் எடுத்ததும் ஐஸ்கிரீமுக்குள் கை விட்டேன். அதையேதான் மீண்டும் செய்யப்போவதாக செய்கை காட்டினேன். இதற்கு, வேறுவிதமாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share