ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயமடைந்த 1175 பயணிகளில் 793 பேர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் முடிவடைந்து மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(ஜூன் 4) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், விபத்து நடைபெற்ற ரயிலின் புகைப்படத்தை பதிவிட்டு,
இந்த துயரமான நேரத்தில் விபத்தில் பலியானவர்களின் குழந்தைகளின் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்ய முடிந்தது..
சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியின் உறைவிட வசதியில் நான் அத்தகைய குழந்தைகளுக்கு இலவச கல்வியை வழங்குகிறேன்.
மேலும் , மீட்பு பணியில் முன்னணியில் இருந்த அனைத்து துணிச்சலான ஆண்களுக்கும் , பெண்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும், இரத்த தானம் செய்தவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் அதானி குழும தலைவர் கெளதம் அதானியும் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்து செய்தி தன்னை மனதளவில் ஆழ பாதித்து உள்ளது என தெரிவித்துள்ள அவர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையை வழங்க வேண்டியது மற்றும் அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் சிறக்க செய்ய வேண்டியதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பு ஆகும் என்றும் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
2.5 கோடி மக்கள் பயணமும் ரயில் பயண பாதுகாப்பும்!
சிறுமி விஷ்ணுபிரியா தற்கொலை: முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்!