TNPL: டிஆர்எஸ் முறையீடு செய்தது ஏன்? அஸ்வின் விளக்கம்!
பால்சி திருச்சி அணிக்கு எதிரான போட்டியில் ஒரே பந்திற்கு 2வது முறையாக டிஆர்எஸ் முறையீட்டுக்கு சென்றது ஏன் என்பது குறித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் ஜூன் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த 7வது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் சீசனில் , சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது.
இதில் திண்டுக்கல் அணியின் கேப்டனாக அஸ்வின் விளையாடி வருகிறார். நேற்று(ஜூன் 14 ) நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பால்சி திருச்சி அணிகள் நேரடியாக மோதின.
இந்த ஆட்டத்தின் போது 12வது ஓவரை வீசுவதற்காக திண்டுகல் அணியின் கேப்டன் அஸ்வின் வந்தார். அந்த ஓவரின் 5-வது பந்தில் திருச்சி அணியின் பேட்ஸ்மேனான ராஜ்குமார் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க நடுவர் உடனே விக்கெட்டும் கொடுத்து விட்டார்.
ராஜ்குமார் உடனடியாக 3ஆம் நடுவரிடம் மேல்முறையீடு சென்றார். அப்போது மூன்றாம் நடுவர் சோதித்துப் பார்த்தபோது, பேட் தரையில் பட்ட சமயத்தில் பந்து பேட்டை கடந்து சென்று இருக்கிறது.
அதேபோல் பந்து பேட்டிற்கு வரும் முன்பாக ஸ்னிக்கோமீட்டரில் உரசும் சத்தம் கேட்டதன் அடிப்படையில் பந்து பேட்டில் படவில்லை என்று கூறி 3ஆம் நடுவர் இது விக்கெட் இல்லை என்ற அறிவித்தார்.
பொதுவாக பேட்ஸ்மேன் டிஆர்எஸ் முடிவைக் கேட்டு அதை மூன்றாம் நடுவர் மாற்றினாலோ அல்லது விக்கெட் கொடுத்தாலோ, போட்டி அடுத்த பந்தை நோக்கி நகர்ந்து விடும்.
ஆனால் திண்டுக்கல் கேப்டன் அஸ்வின் மூன்றாம் நடுவரின் தீர்ப்பை ஏற்காமல் தங்களுக்கு இருக்கும் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தினார்.
இதை அடுத்து மீண்டும் மூன்றாம் நடுவர் அதே பந்தை ரிப்ளே செய்து அவுட்டா இல்லையா என மீண்டும் பார்த்து நாட் அவுட் என்றே அறிவித்தார்.
இந்நிலையில், ஒரே பந்திற்கு எதற்காக இருமுறை டிஆர்எஸ் முறையீடு செய்யப்பட்டது என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அஸ்வின், “டிஎன்பிஎல் தொடருக்கு டிஆர்எஸ் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
ஸ்னிக்கோமீட்டரில் பந்து பேட்டை கடந்த போது ஸ்பைக் வந்தது. ஆனால் நடுவரின் முடிவு எனக்கு சரியாக படவில்லை.
இதனால் வேறு கேமரா கோணத்தில் மீண்டும் சோதனை செய்யப்படும் என்று எண்ணி, டிஆர்எஸ் முறையீடு செய்தேன் என்று” என்றார்.
இந்த போட்டியில் திண்டுக்கல் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.
அதில் அஸ்வின் 4ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 26ரன்கள் மட்டும் கொடுத்து 2விக்கெட்டுகளை எடுத்து திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஊக்கத்தொகையுடன் யுபிஎஸ்சி தேர்வு பயிற்சி: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
செந்தில்பாலாஜியின் இதயம்: ரிப்போர்ட் இதுதான்!