தமிழ்நாடு ப்ரீமியர் கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூலை 7) நடைபெற்ற குவாலிஃபயர் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்த கோவை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுஜய் 16 பந்துகளில் 12 ரன்னும், சுரேஷ்குமார் 12 பந்துகளில் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக களமிறங்கிய சச்சின் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி, 46 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 70 ரன்களை குவித்தார்.
மறுபுறம் முகிலேஷ் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸர் என மொத்தம் 44 ரன்களை சேர்த்தார்.
அவர்களை தொடர்ந்து களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுக்க 20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 193 ரன்கள் எடுத்தது.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விமல் குமார் 1 ரன்னிலும், சிவம் சிங் 10 ரன்னிலும் ஆட்டமிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர்.
அடுத்து வந்த பூபதி 19 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் எடுக்க, கேப்டன் பாபா இந்திரஜித் 17 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர், களமிறங்கிய ஆதித்யா கணேஷ் மற்றும் கிஷோர் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து நடையை கட்டினர்.
பின்னர் வந்த சரத்குமார் தனது அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் படி தனது ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி, 26 பந்துகளில் 8 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்பட 62 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறவே, திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில், கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஜூலை 10ஆம் தேதி நடக்கும் 2-வது குவாலிஃபயர் போட்டியில் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி விளையாடும்.
இதனிடையே, இன்று (ஜூலை 8) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் களம் காண உள்ளன.
இதில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: தினை கிச்சடி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!