தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மதுரை அணியின் கேப்டன் ஹரி நிஷாந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து, திருச்சி அணிக்கு துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அர்ஜுன் மூர்த்தி முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், மறுமுனையில் மற்றோரு துவக்க ஆட்டக்காரரான வசீம் அகமது அதிரடியாக ஆட்டத்தை துவங்கினார்.
அர்ஜுன் மூர்த்தி ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சஞ்சய் யாதவ், வசீம் அகமதுடன் இணைந்து அதிரடியாக அணியின் எண்ணிக்கையை நகர்த்தினர்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல், வசீம் அகமது 55 பந்துகளில் 90 ரன்களும், சஞ்சய் யாதவ் 33 பந்துகளில் 60 ரன்களும் சேர்க்க, திருச்சி அணி 20 ஓவர்களில் 193 ரன்கள் குவித்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டிற்கு 126 ரன்கள் சேர்த்து அசத்தியது. மதுரை அணிக்காக, குர்ஜப்நீத் சிங் மற்றும் அலெக்சாண்டர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.
இதை தொடர்ந்து, 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர் சுரேஷ் லோகேஷ்வர், ஜெகதீசன் கவுசிக், என்.எஸ் சதுர்வேத் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு, பவர்-பிளேவுக்குள்ளேயே ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில், கேப்டன் ஹரி நிஷாந்த் அதிரடியாக விளையாடினாலும், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அதை தொடர்ந்து களமிறங்கிய அனைவரும், ராஜ்குமார் மற்றும் சஞ்சய் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சில் சிக்கி சரசரவென தங்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். இதன் காரணமாக, மதுரை அணி 126 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதை தொடர்ந்து, 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற திருச்சி அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணிக்காக ராஜ்குமார் மற்றும் சஞ்சய் யாதவ் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
பேட்டிங்கில் 60 (33) ரன்கள், பந்துவீச்சில் 3 விக்கெட்கள், 2 கேட்ச்கள் என போட்டி முழுவதும் அல்-ரவுண்டராக அசத்திய சஞ்சய் யாதவ், இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை தட்டிச் சென்றார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மலையாள இயக்குனருடன் மெகா பட்ஜெட் படத்தில் இணையும் சிம்பு?
அட்டகாசமான அம்சங்களுடன் ‘Redmi 13 5G’: விலை இவ்வளவு தானா?