இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 20 ) நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள் எடுத்து இருந்தாலும் அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் இந்திய அணி 200 ரன்களுக்கும் மேல் எடுத்தும் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
டி20 உலகக்கோப்பை தொடர் எதிர்வரும் வேளையில் இப்படி ஒரு மோசமான தோல்வியை சந்தித்து இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ,நேற்றைய போட்டியின் போது ஏற்பட்ட தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா,
”நாங்கள் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும்,
பந்துவீச்சாளர்கள் தங்களது பங்களிப்பை சரியாக வழங்காததே இந்த தோல்விக்கு காரணம்.
200 ரன்கள் என்பது எதிரணியை வீழ்த்த போதுமான ரன்கள் தான். ஆனாலும் இந்த போட்டியில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பீல்டிங்கின் போது சரியாக பயன்படுத்தவில்லை.
நாங்கள் பந்துவீச்சில் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். இதுபோன்ற போட்டிகள் தான் அணி எங்கு தவறு செய்கிறது என்பதை சரியாக உணர வைக்கிறது.
மொஹாலி மைதானம் ஒரு ஹை ஸ்கோரிங் மைதானம் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் 200 ரன்களுக்கு மேல் அடித்து இருந்தாலும் எந்த இடத்திலும் ரிலாக்ஸாக இருக்கக் கூடாது என்று நினைத்தோம்.
அதேபோன்று நாங்கள் பவுலிங் செய்யும்போது சில விக்கெட்டுகளை எடுத்தாலும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.
அவர்களது ஷாட்கள் மிகச் சிறப்பாக இருந்தது. இந்த மைதானத்தில் இந்த ரன்களை சேசிங் செய்ய முடியும் என்பது எங்களுக்கு ஆரம்பத்திலேயே தெரியும்.
ஆனாலும் கடைசி நான்கு ஓவர்களில் 60 ரன்கள் என்று இருக்கும் போது நிச்சயம் அதனை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இனிவரும் ஆட்டங்களில் நிச்சயம் நாங்கள் பந்து வீச்சில் இன்னும் அதிக கவனத்தை செலுத்துவோம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பட்ஜெட் விலையில் டெக்னோ பாப் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்!
ஆ.ராசாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை