”உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த போட்டி தான் எனது வாழ்க்கையின் சிறந்த இன்னிங்ஸ்” என்று ஆட்டநாயகன் விருது பெற்ற விராட் கோலி கூறியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மெல்போர்ன் மைதானத்தில் மோதின.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 160 ரன்களை குவித்து த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
வெற்றியை உறுதி செய்த கோலி – ஹர்திக் ஜோடி!
எளிதாக வென்று விடலாம் என்று எதிர்பார்த்து களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கே.எல்.ராகுல் (4), ரோகித் சர்மா (4), சூர்யகுமார் யாதவ் (15) மற்றும் அக்ஷர் பட்டேல் (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 31 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இந்நிலையில் தான் விராட்கோலி-ஹர்திக் பாண்டியா கூட்டணி இந்திய அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்டது. அபாரமாக விளையாடிய விராட் கோலி 53 பந்துகளில் 82 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் 40 ரன்களையும் குவித்தனர்.
இந்த ஜோடி 100 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நம்பிக்கை கொடுத்த பாண்டியா!
அப்போது தனக்கும் பாண்டியாவுக்கும் இடையேயான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில், “இது நம்ப முடியாத சூழலாக இருக்கிறது. பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. இது எப்படி நடந்தது என்பதே எனக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியா 4 விக்கெட்களை இழந்தவுடன் என்ன செய்வது என்பதே புரியவில்லை. அப்போது ஹர்திக் பாண்ட்யா தான் எனக்கு பக்க பலமாய் இருந்தார்.
என்னிடம் தொடர்ச்சியாக, ’விராட், நாம் கடைசி வரை நின்று விளையாடினால் நிச்சயம் நம்மால் வெற்றி பெற முடியும்’ என கூறிக் கொண்டே இருந்தார். அதற்கேற்றார் போலவே ஒவ்வொரு ஓவரிலும் தனி தனியாக திட்டமிட்டு விளையாடினோம். நம்பிக்கை இல்லாத எனக்கு ஹர்திக்கின் வார்த்தைகள் மாற்றத்தை கொடுத்தது.
சிறந்த இன்னிங்ஸ் இதுதான்!
எங்களது கணக்கீடு எளிமையாக இருந்தது. பெவிலியன் முடிவில் இருந்து ஷாஹீன் அப்ரிடி பந்துவீசியபோது, அவரை வீழ்த்த முடிவு செய்தோம். நவாஸ் பந்து வீச ஒரு ஓவர் இருந்தது.
ஹரிஸ் அவர்களின் முதன்மை பந்துவீச்சாளர். அவர் ஓவரில் அடித்துவிட்டால் அவர்கள் பீதியடைவார்கள் என்று தெரியும். அதன்படியே அவர் வீசிய 19வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களை அடித்தேன். நினைத்தது மாதிரியே நடந்தது.
இன்று வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலி தான் எனது சிறந்த இன்னிங்ஸ். ஆனால் இன்றைய ஆட்டத்தை அதைவிடவும் மேலாக நான் உணர்கிறேன்.
மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்திய ரசிகர்களின் கூட்டம் அமோகமாக இருந்தது. நீங்கள் (ரசிகர்கள்) தொடர்ந்து என்னை ஆதரித்தீர்கள், உங்கள் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
T20 WorldCup 2022: பாகிஸ்தானின் பக்கா ஸ்கெட்ச்… சொதப்பிய ஓபனர்கள்… துவம்சம் செய்த கிங் கோலி
கோவை கார் சிலிண்டர் விபத்து: சந்தேகம் எழுப்பும் பாஜக!