ஐசிசி டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று முடிந்து அரையிறுதிச் சுற்று துவங்கியுள்ளது. இன்று (நவம்பர் 9 ) நடைபெற்று வரும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன.
நாளை (நவம்பர் 10) நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி நேரடியாக மோதவுள்ளது.
இந்நிலையில், இந்த அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு 65% அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கணித்துள்ளார்.
இது பற்றி பாகிஸ்தான் சமா தொலைக்காட்சிக்கு நேற்று ( நவம்பர் 8 ) அவர் பேட்டியளித்துள்ளார்.
இந்தியாவுக்கு மேலே ஒருபடி
அப்போது பேசிய அவர் “இவ்விரு அணிகளுமே சரிசமமாக சமநிலையை கொண்டுள்ளன. அதேபோல இந்த தொடரில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு இந்த நிலையை எட்டியுள்ளன.

மேலும் சமீப காலங்களில் அவர்களது செயல்பாடுகளும் சிறப்பாக இருந்துள்ளன. ஆனால் என்னுடைய கருத்துப்படி இங்கிலாந்து அணி 60 – 65% மேல் வெற்றிபெறும் என்று சொல்வேன்.
அதாவது, இந்தியாவுக்கு மேலே ஒருபடி என்று சொல்வேன். ஏனெனில் பேட்டிங் அல்லது பவுலிங் அல்லது சுழல் பந்து வீச்சு துறை என எதுவாக இருந்தாலும் அவர்களது அணியில் சமநிலை அபாரமாக உள்ளது.
அழுத்தம் வாய்ந்த போட்டி
இருப்பினும் இது மிகப்பெரிய அழுத்தம் வாய்ந்த போட்டி என்பதால் இதில் குறைவான தவறுகளை செய்யும் அணியில் 100% அர்ப்பணிப்புடன் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அணியே இறுதியாக வெல்லும்” என்று கூறியுள்ளார்.

அதாவது இரு அணிகளுமே சமமாக இருந்தாலும் இந்தியாவை விட இங்கிலாந்து சற்று அதிகப்படியான சமநிலையை கொண்டுள்ளதால் அவர்களே இப்போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சாகித் அப்ரிடி கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாகித் அப்ரிடியின் கணிப்பு நடப்பதற்கான வாய்ப்பு இல்லை என இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்