என் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த மும்மூர்த்திகள்- சஞ்சு சாம்சன் தந்தை காட்டம்!

விளையாட்டு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 2 சதங்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்த சாதனையை அவர் படைத்தார். இதனால் டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் இடத்தில் சஞ்சு சாம்சனை தொடர்ச்சியாக களமிறக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ரசிகர்கள் வைத்தனர்.

இந்த நிலையில் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் என் மகனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டார்கள்.

முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்தின் வார்த்தைகள் எங்களை காயப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்காக அவர் என்ன விளையாடினார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த அந்த மனிதர் கொஞ்சம் கூட என் மகனை ஊக்கப்படுத்தவில்லை.

வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி சதம் விளாசிய பின், ஸ்ரீகாந்த் கொஞ்சம் கூட பாராட்டவில்லை. மாறாக சாதாரண அணியான வங்கதேசத்துடன் தான் சஞ்சு சாம்சன் சதம் அடித்துள்ளார் என்று குறை கூறுகிறார். யாருடன் சதம் அடித்தாலும், அது சதம் தான். அதனால் சஞ்சு சாம்சனுக்கான மரியாதையை சீனியர்கள் கொடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டிலேயே இந்திய அணியில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்,சில போட்டிகளில் களமிறங்கினாலும், தொடர்ச்சியாக எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த பிறகே, சஞ்சு சாம்சனுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

114 அடி உயரத்தில் வளர்ந்து நிற்கும் பிரமாண்ட சேவல்… என்ன காரணம்?

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?

 

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *