ஐசிசி டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 23 ஆம் தேதியன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு தற்போது பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு எதிர்பார்ப்பு உலக அளவில் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் அணி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்தது.
இதன்மூலம் 1992முதல் தொடர்ச்சியாக உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக தோற்று வந்த மோசமான வரலாற்று சோகத்துக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைத்தது.
நம்பிக்கையுடன் இந்தியா?
இந்நிலையில் வரும் 23ம் தேதி மெல்போர்ன் நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து இந்தியா பழி தீர்க்குமா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்திடம் மோதிய பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், வலுவான ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா தோற்கடித்து நம்பிக்கையுடன் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ளது.
உலகமே அசையாமல் நிற்கும்!
இதற்கிடையே ரசிகர்களின் இதய துடிப்பை எகிற வைக்ககூடிய இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தினை பார்க்க தாமும் ஆவலுடன் காத்திருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் முன்னாள் மல்யுத்த வீரருமான “தி ராக்” கூறியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ராக் பேசுகையில், ” கிரிக்கெட் போட்டியில் பரம எதிரிகளான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போது உலகமே அசையாமல் நிற்கும்.
இது வெறும் கிரிக்கெட் போட்டி என்பதையும் தாண்டியது. உண்மையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் மிகப்பெரிய போட்டிக்கான நேரம்” என்று தமக்கே உரித்தான தெறிக்கவிடும் பாணியில் பேசியுள்ள ராக் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகரான ராக், இந்தியா பாகிஸ்தான் போட்டிக்குறித்து ஏன் பேச வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் நடிப்பில் உருவாகியுள்ள ’பிளாக் ஆடம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில், இந்தியாவில் படத்தின் புரொமோசனுக்காகவே ராக் இவ்வாறு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டி20 உலகக்கோப்பை: வெற்றியைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து
இந்தியா-பாகிஸ்தான் போட்டி: தடை ஏற்பட வாய்ப்பு!