கோலி – ரோகித் இடையேயான விரிசல் உண்மை தான்: பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

விளையாட்டு

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடையே விரிசல் இருந்தது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் 2019 உலகக்கோப்பைக்கு பின் இருவரிடமும் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலையிட்டு பேசியதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கோலி மற்றும் ரோகித் இடையே 2019ஆம் ஆண்டு விரிசலும் சண்டையும் இருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் ரசிகர்களும் இருவரும் பேசிக் கொள்ளாமல் இருப்பது போன்ற தருணங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.

2019 உலகக்கோப்பையில் தோற்ற போது அந்த வதந்திகள் உச்சகட்டத்தை தொட்ட நிலையில் 2021 ஆம் ஆண்டு விராட் கோலியின் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை பிசிசிஐ பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்த போது கொழுந்து விட்டு எரிந்தது.

இருப்பினும் அவை அனைத்தையும் இந்திய அணி நிர்வாகம் மறுத்து வந்த நிலையில் அவர்களும் அவை அனைத்தும் வதந்திகள் என்றும் தங்களுக்கிடையே சண்டையில்லை என்பது போல் கருத்துகளையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் , விராட் – ரோகித் ஆகியோரிடையே விரிசல் இருந்தது உண்மை தான் என்பதை நிரூபிக்கும் வகையில் 2019 உலகக்கோப்பைக்கு பின் இருவரிடமும் அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலையிட்டு பேசியதாக முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சுயசரிதையில் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ள அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது: “2019க்குப்பின் உலகக்கோப்பைக்கு பின் குறிப்பாக செமி பைனலில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற பின் இந்திய அணியில் விரிசல் இருப்பதாக ஊடகங்களில் மோசமான செய்திகள் வெளி வந்தன.

அத்துடன் விராட் தலைமையில் ஒரு அணியும் ரோகித் தலைமையில் ஒரு அணியும் இந்தியா அணிக்குள் இருப்பதாகவும் அவர்கள் ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின் தொடர்வதை நிறுத்தி விட்டதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்தன. அதை தொடர்ந்து அனுமதித்தால் அணி நிலை குலைந்து விடும் என்ற நிலைமை ஏற்பட்டது.

2019 உலகக்கோப்பை முடிந்த பின் 10 நாட்கள் கழித்து அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு சென்ற நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் களமிறங்க காத்திருந்தோம். அந்த தொடருக்கு முன்பாக விராட் – ரோகித் ஆகிய இருவரையும் தனது அறைக்கு அழைத்த ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட்டின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் இருவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்பதை அவர்களது மனதில் ஆழமாக பதித்தார்.

மேலும் , இதுவரை சமூக வலைதளங்களில் நடந்தவை அனைத்தும் பரவாயில்லை ஆனால் 2 மூத்த நட்சத்திரங்களாக இருக்கும் நீங்கள் இவை அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ரவி சாஸ்திரி தமக்கே உரித்தான பாணியில் அவர்களிடம் தெரிவித்தார்.

அத்துடன் அனைத்தையும் விட்டுவிட்டு நாம் ஒரு அணியாக பயணிக்க விரும்புவதாகவும் அவர்களிடம் ரவி சாஸ்திரி கூறினார். ரவி சாஸ்திரியின் அந்த பேச்சுகளுக்கு பின் அனைத்தும் இனிமையான வகையில் நடக்கத் துவங்கியது. அது அந்த இருவரையும் அமைதியாக்கி ஒரே இடத்தில் உட்கார்ந்து பேச வைத்தது. ரவி சாஸ்திரி எந்த நேரத்தையும் வீணடிக்காமல் நம்முடைய வெள்ளை பந்து கேப்டன் மற்றும் துணை கேப்டனை அழைத்து அவர்களது மனதை தெளிவுப்படுத்தியதாக உணர்ந்தார். அத்துடன் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் அதை புரிந்து கொண்டு ரவி சாஸ்திரியின் கருத்துப்படி செயல்பட துவங்கினார். அது ஒருவருக்காக யாரும் இல்லை யாருக்காகவும் ஒருவர் இல்லை அனைவரும் அணிக்காக இருக்கிறோம் என்ற நமது கலாச்சாரத்தை எடுத்துக்காட்டியது” என்று கூறியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் விவாதபொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட்: யாருக்கு வெற்றி வாய்ப்பு?

வாணி ஜெயராம் மறைவு: இறுதி ஊர்வலம் துவங்கியது!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *