கிரிக்கெட்டில் நோ பால் வீசுவது என்பது குற்றமாகும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை அணிகள் நேற்று (ஜனவரி 5) மோதிய இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆடும் லெவனை பொறுத்தவரை சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ராகுல் திரிபாதியும், ஹர்ஷல் பட்டேலுக்கு மாற்றாக அரிஷ்தீப் சிங்கும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 206 ரன்கள் எடுத்தனர். இதனால் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பேட்டிங்கிற்கு உகந்த ஆடுகளமான புனே மைதானத்தில், ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளன.
இந்திய அணியின் தோல்விக்கு வீரர்களின் சொதப்பலான பந்துவீச்சு தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் 7 நோ பால்களை வீசியுள்ளனர்.
இதில் அர்ஷ்தீப் சிங் மட்டும் 5 நோ பால்களை வீசியுள்ளார். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் மூன்று நோ பால்களை வீசினார். இதனால் கடுப்பான ஹர்திக் அவருக்கு 19-ஆவது ஓவரில் தான் மீண்டும் வாய்ப்பு வழங்கினார்.
அந்த ஓவரிலும் அர்ஷ்தீப் இரண்டு நோ பால்களை வீசினார். அவர் இந்தப் போட்டியில் 2 ஓவர்களை மட்டும் வீசி 37 ரன்கள் கொடுத்துள்ளார். சிவம் மவி, உம்ரான் மாலிக் ஆகிய இருவரும் தலா ஒரு நோ பால் வீசினர்.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும்போது, “பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கின் பவர்பிளேயில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை.
நாங்கள் சில அடிப்படை தவறுகளை செய்துள்ளோம். அதனை திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறோம்.
தோல்வியிலிருந்து இந்திய அணி கற்றுக்கொண்டது என்னவென்றால், நாம் அனைத்து சூழல்களையும் கட்டுப்படுத்த முடியும் என்பது தான்.” என்றவர்
அர்ஷிதீப் சிங் நோ பால் வீசியது குறித்து பேசும்போது, “நீங்கள் ஒரு நல்ல நாளைப் பெறலாம் அல்லது மோசமான நாளைப் பெறலாம். அடிப்படையில் தவறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த சூழ்நிலையில் அர்ஷ்தீப்புக்கு இது மிகவும் கடினமான ஒரு சூழலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களிலும் அவர் நோ-பால் வீசியுள்ளார். இது அவரைக் குறை கூறுவதற்காக தெரிவிப்பது அல்ல. போட்டியில் நோ-பால் வீசுவது என்பது குற்றமாகும்.” என்று தெரிவித்தார்.
தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “எங்களைப் பொறுத்தவரை, டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மட்டுமே இலங்கைக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறார்கள்.
இந்த ஆட்டத்தில் மிகவும் இளம் வீரர்கள் மட்டுமே ஆடுகிறார்கள். இலங்கையின் முன்னணி வீரர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடுவது ஒரு அற்புதமான அனுபவமாகும்.
இதனால் ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இளம் வீரர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்” என்று இந்திய அணி வீரர்கள் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதால் 1-1 என்ற சமநிலை வகிக்கிறது. நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும்.
செல்வம்
அலங்காநல்லூரில் நடப்பட்டது முகூர்த்தக்கால்: ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்கிறார் உதயநிதி!
குடும்பத்தை வீட்டுக்குள் பூட்டி வைத்து மிரட்டிய இளைஞர்: சென்னையில் பரபரப்பு!