டிஎன்பிஎல் தொடரில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ் அணி கேப்டன் தனது அணியின் வெற்றிக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கிடையே 7வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நெல்லையில் நேற்று (ஜூலை 12) இரவு நடைபெற்றது. இப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியுடன் மோதியது நெல்லை ராயல் கிங்ஸ் அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் குமார் (57) அதீக் ரஹ்மான் (50) மற்றும் முகேஷ் (51*) ஆகியோரின் அதிரடியான அரைசதம் கோவை அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவியது.
தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணிக்கு முதல் ஓவரில் இருந்தே நெருக்கடி கொடுத்தனர் கோவை அணியின் பவுலர்கள். முதல் 10 ஓவரிலேயே 64 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது நெல்லை அணி.
அங்கிருந்து சிறிதும் மீள முடியாத நெல்லை கிங்ஸ், 15 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது.
கோவை கிங்ஸ் சார்பில் ஜடாவேத் சுப்ரமணியம் 4 விக்கெட்டும், கேப்டன் ஷாருக்கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆட்டநாயகன் விருதை கோவை வீரர் ஜடாவேத் சுப்பிரமணியமும், தொடர் நாயகன் விருதை நெல்லை கிங்ஸ் அணி வீரர் அஜிடேஷ் குருசாமியும் பெற்றனர்.
தொடர்ந்து 2 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ் அணியின் கேப்டன் ஷாருக்கான், போட்டிக்கு பின்னர் அளித்த பேட்டியில்,
“நாங்கள் ஏலத்தில் அமர்ந்தபோது, எல்லா சூழ்நிலையிலும் கூலாக இருக்கும் வீரர்களை எடுப்பது என்பதுதான் திட்டம். ஒரு வருடம் மட்டுமல்ல, 2025 வது வரை தொடர்ந்து சாம்பியன் பட்டத்திற்கு குறி வைத்துள்ளோம்.
விளையாட்டில் அணியில் உள்ள சக வீரரை ஆதரிப்பது மிகவும் முக்கியம்.அதுதான் கேப்டனின் வேலை. நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்த பிறகு, அவர்களை 2-3 போட்டிகளுக்கு பிறகு கைவிடுவதில் எந்த அர்த்தமுமில்லை.
இந்த அணியின் பொறுப்பை ஏலத்தில் இருந்தே அணி நிர்வாகம் என்னிடம் கொடுத்துவிட்டது. அவர்கள் கண்களை மூடிக்கொண்டு என்னை நம்பினர்.
எனினும் இந்த அழகான வெற்றிக்கு இது மட்டும் காரணமல்ல. அணி வீரர்களுக்கு இதில் முக்கிய பங்கு உள்ளது.” என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பேரிடர் நிவாரண நிதி: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி!
தெற்கு ரயில்வே: 90 ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.934 கோடி!