இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகளில் நேரடியாக மோத உள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களும் எடுத்தன.
183 ரன்கள் முன்னிலையுடன் 2 வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் யஜஸ்வி ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் மொத்தம் 38 ரன்கள் எடுத்தார்.
அதேபோல் கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 57 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசினார்.
இந்திய அணியில் நான்காவது ஆட்டக்காரராக களம் இறங்கிய விக்கெட் கீப்பர் இஷான் கிஷனும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துகளை அடித்து நொறுக்கினார்.
அதன்படி 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 52 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார்.
இப்படியாக, இந்திய அணி 24 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 181 ரன்களுடன் டிக்ளேர் செய்து, வெஸ்ட் இண்டீசுக்கு 365 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து 2 வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 4 வது நாள் முடிவில் 32 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்படி, தேஜ்நரின் சந்தர்பால் 98 பந்துகளில் 24 ரன்களும் பிளாக்வுட் 30 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதனிடையே 4-வது நாளில் மழை குறுக்கிட்டு அவ்வப்போது பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் 5 வது மற்றும் கடைசி ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை வர ஆரம்பித்தது. இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் மழை தொடர்ந்து குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
மேலும், இரு அணிகளும் மோதும் ஒருநாள் போட்டி ஜூலை 27 ஆம் தேதி தொடங்குகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: ஔவையார் கொழுக்கட்டை (ஆடி ஸ்பெஷல்)
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!