இந்தியாவை ரொம்பவே மிஸ் செய்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபக்தர் ஜமான் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. அதே வேளையில், இந்த தொடரில் இந்தியா விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை பாகிஸ்தானில் விளையாட வைக்க எவ்வளவோ முயன்றும் பலனளிக்காமல் போய் விட்டது.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு, இனிமேல் பாகிஸ்தான் இந்தியா மோதும் ஆட்டங்கள் 2027 ஆம் ஆண்டு வரை துபாய் போன்ற பொது இடத்தில்தான் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஃபக்தர் ஜமான் கூறியிருப்பதாவது, ”கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாட இந்தியா வந்த போது, இந்திய மக்கள் எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியர்கள் அளித்த உணவும் எங்களை மகிழ வைத்தது. குறிப்பாக ஹைதராபாத் சென்ற போது, எங்களை அப்படி உபசரித்தனர். நிச்சயமாக இந்தியாவில் விளையாடுவதை நாங்கள் மிஸ் செய்கிறோம். நாங்கள் அனைத்தையும் இழந்து நிற்கிறோம் .
இந்திய அணி பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும். இந்தியாவில் எங்களுக்கு கிடைத்த வரவேற்பு, உபசரிப்பை திருப்பி செய்ய விரும்புகிறோம். ஆனால், அவர்கள் வர மறுக்கிறார்கள். எனினும், துபாயில் இந்தியாவுடன் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்று கோப்பையை கைப்பற்றியது. இறுதி ஆட்டத்தில் ஃபக்தர் ஜமான் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தொடக்க விழா நிகழ்ச்சியில் அனைத்து கேப்டன்களும் பங்கேற்று கோப்பையுடன் புகைப்படம் எடுப்பது வழக்கமானது. இந்த நிகழ்வில் முதலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அதுவும் தற்போது உறுதியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்