bajrang punia returned the padma shri
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இன்று (டிசம்பர் 22) மல்யுத்த விளையாட்டில் இருந்து விலகுவதாக அறிவித்து, தனது பத்ம ஸ்ரீ விருதையும் திருப்பி ஒப்படைத்துள்ளார்.
சுமார் 12 பெண் மல்யுத்த வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் குற்றம் சாட்டப்பட்ட எம்.பி.யும், மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக கடந்த ஓராண்டாக போராடியவர்களில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் ஒருவர்.
தற்போது பிரிஜ் பூஷன் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்தில் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக, பிரிஜ் பூஷனின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விளையாட்டிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் கண்ணீருடன் அறிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு பெற்ற பத்மஸ்ரீ விருதை இன்று திரும்ப ஒப்படைத்துள்ளார் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அன்புள்ள பிரதமரே, நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் நாட்டுக்காக வேலை செய்வதில் பிஸியாக இருப்பீர்கள். என்றாலும் மல்யுத்த வீரர்களின் விஷயத்தில் உங்களின் கவனத்தை பெற முயல்கிறேன்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நமது மல்யுத்த வீராங்கனைகள் பிரிஷ் பூஷன் சிங் மீது பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தை தொடங்கியது நீங்கள் அறிந்திருப்பீர்கள். நானும் அவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டேன். அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்பின் மூன்று மாதங்கள் ஆனபோதும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நாங்கள் மீண்டும் ஏப்ரல் மாதம் வீதிக்கு வந்து போராடினோம். அப்போதும் பிரிஜ் பூஷனுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, நாங்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது. அதன் பலனாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. ஜனவரியில் அவருக்கு 19 புகார்தாரர்கள் இருந்தனர். ஆனால், ஏப்ரல் மாதத்துக்குள் அந்த எண்ணிக்கை 7 ஆக குறைந்தது. இதன் பொருள் பிரிஜ் பூஷன் 12 மல்யுத்த வீராங்கனைகளிடம் தனது செல்வாக்கை காண்பித்து மிரட்டியுள்ளார் என்பதே. எங்களின் போராட்டம் 40 நாட்கள் நீடித்த சமயத்தில் மேலும் ஒரு வீராங்கனை போராட்டத்தில் இருந்து பின்வாங்கினார்.
அந்தத் தருணத்தில் எங்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் போராட்ட தளம் இடிக்கப்பட்டது. நாங்கள் டெல்லியில் இருந்து வெளியேற்றப்பட்டதோடு போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். எனவே, நாங்கள் எங்கள் பதக்கங்களை கங்கை நதியில் வீச முடிவெடுத்தோம். நாங்கள் எங்கள் இதயத்திலிருந்து போராடினோம்.
ஆனால் பிரிஜ் பூஷன் போன்ற ஒரு நபரின் தொழில் பார்ட்னரும், அவரின் நெருங்கிய உதவியாளர்தான் தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தேர்வால் நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன். இன்று முதல் நீங்கள் என்னை மல்யுத்த களத்தில் பார்க்க மாட்டீர்கள். எனது பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்” என்று பஜ்ரங் புனியா வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Politics_2022_/status/1738166855813202009
அதனைத்தொடர்ந்து இன்று மாலையில் பிரதமர் இல்லத்தை நோக்கி புறப்பட்ட அவரை லோக் கல்யாண் மார்க்கில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அதன் காரணமாக அங்குள்ள நடைபாதையிலேயே பத்மஸ்ரீ விருதை வைத்துவிட்டு புனியா திரும்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிரிஸ்டோபர் ஜெமா
பொன்முடி மகனை விரட்டும் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு!
என்னை எள்ளி நகையாடிய கோமாளிகளே… இப்போது என்ன செய்கிறீர்கள்? ஸ்பெக்ட்ரம் ஏலம் ரத்து… ஆ.ராசா கேள்வி!
தோட்டத் தொழிலாளர்கள் தொழில்துறை அடிமைகளாக மாறியது எப்படி? – பாகம் 3!
bajrang punia returned the padma shri