தனக்கு கேரள ரசிகர்கள் வைத்த கட் அவுட்டை பிரேசில் வீரர் நெய்மர், பகிர்ந்திருப்பதுடன், நன்றியும் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், அது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாளை (டிசம்பர் 18) நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினா ஆகிய அணிகள் மோத உள்ளன.
இந்த நிலையில், இந்தியாவிலும் கால்பந்துக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும், குறிப்பாக கேரளாவில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இதில் போர்ச்சுகல், அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாட்டு வீரர்களின் கால்பந்து ரசிகர்கள்தான் அதிகம்.
அவர்கள், வீரர்களின் பெயர்களில் ரசிகர் மன்றங்களை அமைத்து இருப்பதுடன், அதன்மூலம் பலருக்கும் உதவி செய்து வருகின்றனர்.
மேலும் அவர்கள், இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே, தங்களுடைய பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களுக்கு கட் அவுட்களை வைத்து, அப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.
குறிப்பாக, அர்ஜென்டினா வீரர் மெஸ்சியின் ரசிகர்கள் செருபுழா ஆற்றின் மீது அவருடைய கட் அவுட்டை 30 அடியில் வைத்திருந்தனர்.

அதை மெஸ்சியின் ரசிகர்கள் வைரலாக்கினர். இதைத் தொடர்ந்து மற்ற வீரர்களின் ரசிகர்களும் இதேபோன்று கட் அவுட் வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி, பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கும் 40 அடியில் அதே ஆற்றில் கட் அவுட் வைத்து மகிழ்ந்தனர். இது, மெஸ்சியின் கட் அவுட்டைவிட 10 அடி உயர்ந்தது. அதுபோல், ரொனால்டாவுக்கும் கட் அவுட் வைத்து மகிழ்ந்தனர்.
இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில், ஆற்றில் ஆடிய நெய்மர், மெஸ்சி: கேரளாவில் நடந்த விநோதம் என்ற தலைப்பில், கடந்த நவம்பர் 4ஆம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
கேரள கால்பந்து ரசிகர்கள் கட் அவுட் மட்டுமின்றி, தங்களுக்கு பிடித்த அணியின் டி-சர்ட்டுகளையும் வீரர்கள் படம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இது சம்பந்தமாக கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற பேரணியில், பிரேசில், அர்ஜென்டினா அணி ரசிகர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டதும் தனிக்கதை.
இந்த நிலையில் கேரளத்தில் தனக்கு கட் அவுட் வைக்கப்பட்ட படத்தை, நெய்மர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், “உலகில் உள்ள அனைத்திலும் அன்பு இருக்கிறது. மிக்க நன்றி, கேரளம், இந்தியா” என நெய்மர் பதிவிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் நெய்மரின் கட் அவுட்டுடன் தந்தையும், அவரது குழந்தையும் நெய்மர் பெயர் பொறித்த ஆடையுடன் இருந்தனர். நெய்மரின் இந்தப் பதிவை கேரள ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
அதேநேரத்தில், இந்த உலகக்கோப்பை தொடரில் பிரேசில் அணி, குரோஷியாவிடம் காலிறுதியில் தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
பில்கிஸ் பானு மனு தள்ளுபடி: இதுவரை நடந்தது என்ன?
கோமாரி நோய்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!