பிரதமர் ஷேக் ஹசீனாவின் தலையீட்டைத் தொடர்ந்து, பங்களாதேஷ் கிரிக்கெட் அணி கேப்டன் தமிம் இக்பால் தனது ஓய்வு அறிவிப்பை இன்று (ஜூலை 7) திரும்பப் பெற்றுள்ளார்.
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பங்களாதேஷ் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
பத்திரிகையாளர்கள் முன்னிலையில், “இதுதான் எனது முடிவு. நான் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக முயற்சியும் செய்தேன். இந்தத் தருணத்தில் இருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.” என்ற கண்ணீர் மல்க, நா தழுதழுக்க தமிம் இக்பால் கூறியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பங்களாதேஷ் அணிக்காக 37 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளா தமிம் 21 வெற்றிகளுடன் லக்கி கேப்டனாக அறியப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் தோல்வியை தழுவிய நிலையில் தமிம் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்நிலையில் தமீம் இக்பால் தனது மனைவி, முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மோர்டாசா மற்றும் பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் ஆகியோருடன் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் மாலையில் பிரதமர் இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமீம்.
அவர், ”பிரதமர் இன்று மதியம் என்னை தனது இல்லத்திற்கு அழைத்தார். நாங்கள் நீண்ட நேரம் கலந்துரையாடினோம். அப்போது அவர் என்னை கிரிக்கெட்டுக்கு திரும்பும்படி அறிவுறுத்தினார். நாட்டின் மிக முக்கியமான நபர் ஒருவர் சொல்லும்போது நான் மறுக்க முடியாது.
எனினும் அவரிடம் எனது சிகிச்சைக்காக ஆறு மாதங்கள் ஓய்வை கேட்டுள்ளேன். சிகிச்சையை முடித்துவிட்டு மீண்டும் பங்களாதேஷ் அணி கேப்டனாக களமிறங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கலைஞர் பெயரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!
கலைஞர் பெயரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!