மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ரயில்வே அணியை இன்று (ஜூன் 26) வீழ்த்தி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக தமிழ்நாடு அணி நுழைந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடப்பாண்டு தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.
அமிர்தசரஸில் உள்ள குருநானக் மைதானத்தில் இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி, பலம்வாய்ந்த ரயில்வே அணியை எதிர்கொண்டது.
ஆனால் ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே தமிழ்நாடு அணியின் இளம் வீராங்கனை ப்ரியதர்ஷினி அதிரடியான கோல் அடித்து அமர்க்களப்படுத்தினார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ரயில்வே அணி முதல்பாதியில் தற்காப்பு ஆட்டமே ஆடியது.
தொடர்ந்து இரண்டாவது பாதி தொடக்கத்தில் (47வது நிமிடம்) ரயில்வே அணியின் சுப்ரியா ரௌத்ரே சேம் சைடு கோல் அடித்து தமிழக அணி வீராங்கனைகளை மகிழ்ச்சிப்படுத்தினார்.
சில நிமிடங்களில், இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனை இந்துமதி கதிரேசன், மூன்றாவது கோல் போட்டு ஆட்டத்தை மொத்தமாக தமிழ்நாட்டின் பக்கம் திருப்பினார்.
ரயில்வே அணி கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் போராடியது. இந்நிலையில் கூடுதல் நிமிடத்தில் அந்த அணியின் திபர்னிதா டே கோல் அடித்து ஆறுதல் அளித்தார்.
இறுதியில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியை வீழ்த்தியது. இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இதன்மூலம் 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இன்று மாலை நடைபெற்ற உள்ள ஹரியானா – ஒடிசா அணிகள் இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் புதன்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி மோதுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
”மகள் ஷர்மிளா”: புதிய காரை பரிசாக வழங்கி கமல்ஹாசன் வாழ்த்து!
ஆளுநர்-முதல்வர் கடிதப் பரிமாற்றம்: செந்தில்பாலாஜி வழக்கு ஒத்தி வைப்பு!