இந்தியாவில் பல மாநிலங்களில் 2,3 கிரிக்கெட் ஸ்டேடியங்கள் உண்டு. பிரிக்கப்படாத ஆந்திராவில் விஜயவாடா, விசாகப்பட்டினம், ஹைதராபாத் ஆகிய 3 நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இருந்தன. கேரளாவில் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் என இரு கிரிக் கெட் ஸ்டேடியங்கள் உள்ளன.
ஆனால், வளர்ந்த மற்றும் பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னை சேப்பாக்கத்தில் மட்டுமே ஒரே ஒரு கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. தற்போதுதான் சென்னையை தாண்டி மற்றொரு நகரத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில்தான் இந்த மைதானம் அமைக்கப்படவுள்ளது.
கோவையில் இருந்து 18 கி.மீ தொலைவில் சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறைத்துறைக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் 198 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
இதற்காக, டெண்டர் நிறுவனங்களிடத்தில் இருந்து விரிவான திட்ட அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. லண்டன் லார்ட்ஸ், சேப்பாக்கம், பெங்களுரு எம்.ஏ. சின்னசாமி ஸ்டேடியங்களை மாதிரிகளாக கொண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவையில் அமையும் இந்த ஸ்டேடியம் நாட்டிலேயே அதிக இருக்கைகள் கொண்டதாக அமைக்கப்படும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தற்போது, அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் ஒரு லட்சம் இருக்கைகளுடன் நாட்டிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அமையும் இந்த மைதானத்தில் கிரிக்கெட் மியூசியம் உள்பட சகல வசதிகளும் நவீன முறையில் அமையப் போகிறது.
கோவையில் இந்த மைதானம் அமைந்தாலும் அருகிலேயே கேரள மாநிலம் இருப்பதால், இங்கு போட்டி நடந்தால் இரு மாநிலத்தை சேர்ந்த ரசிகர், ரசிகைகள் குவிவார்கள். இதனால், எண்டர்ட்யின்ட்மென்டுக்கு பஞ்சமே இருக்காது என்று தாராளமாக நம்பலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-எம்.குமரேசன்