ஆசியக்கோப்பையை 8வது முறையாக இந்தியா கைப்பற்றிய நிலையில், அடுத்து வரும் உலகக்கோப்பையை முன்னிட்டு வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் குறித்தும், அதில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை சுருட்டி வீசி கோப்பையை கம்பீரமாக அள்ளியது இந்தியா.
ஆனால் இந்த தொடரில் இந்திய வீரர்களில் முக்கியமானவர்கள் சிலர் காயமடைந்துள்ளது சிறிது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித் சர்மா நம்பிக்கை!
இதுகுறித்து இறுதிப்போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ரோகித் பேசுகையில், “ஆசியக்கோப்பையில் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, உலகக்கோப்பைக்கான போட்டியில் வீரர்களை இறுதி செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எனினும் வரும் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியை சந்திக்க உள்ளது இந்தியா. அதற்குள் அக்சர் பட்டேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உடற்தகுதி பெற்று விடுவர் என்று நம்புகிறோம்.
அக்சர் பட்டேல் காயத்தின் நிலை!
அக்சரை பொறுத்தவரை, அவரது மணிக்கட்டு மற்றும் முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை இழக்க இந்தியா விரும்பவில்லை. அவர் காயம் குணமாக ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் ஆகலாம்.
அதன் காரணமாக அவரால் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா உட்பட முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது. எனினும் நாங்கள் அக்சருக்காக காத்திருப்போம்.
அஸ்வினுக்கு வாய்ப்பு!
ஆசியக்கோப்பையில் காயமடைந்த அக்சர் பட்டேலுக்கு பதிலாக, சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுக்கு தயாராகி வந்த வாஷிங்டன் சுந்தர் அணியில் தற்காலிகமாக சேர்க்கப்பட்டார்.
எனினும் அனுபவ சுழற்பந்துவீச்சாளரும், ஆல்ரவுண்டருமான அஸ்வின் ரவிச்சந்திரன் இந்தியாவின் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இதுகுறித்து அவருடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்.
ஸ்ரேயாஸ் 99 சதவீதம் பிட்!
ஷ்ரேயாஸ் ஐயர் சிறிய முதுகுவலியால் ஆசியக் கோப்பை இறுதி கட்டத்தில் விளையாடாமல் வெளியேறினார். தற்போது தொடர் சிகிச்சை காரணமாக தற்போது அவர் 99 சதவீதம் பிட்டாக இருக்கிறார்.
ஆசியக்கோப்பை முன்னதாக ஷ்ரேயாஸ் நீண்ட நேரம் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்தார். அவர் மீண்டும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று நம்புகிறோம்” என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சிறப்பு கூட்டத்தொடர்: நிறைவேற இருக்கும் ’சர்ச்சை’ மசோதாக்கள்!