விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் தொடர்ச்சியாக மூன்று சதங்களை அடித்துள்ளார்.
டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஞ்சி ஆகிய நகரங்களில் நடைபெற்றுவரும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் கலந்து கொண்டுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதிவருகின்றன.
அதன்படி, இன்றைய (நவம்பர் 17) ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- கோவா ஆகிய அணிகள் மோதி வருகின்றன.
இதில், முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்தது.
இந்தப் போட்டியில் சாய் சுதர்சன் மற்றும் நாராயண் ஜெகதீஷன் ஆகிய தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்தனர். சாய் 112 பந்துகள் 117 ரன்கள் எடுத்தார்.
அதில் 13 பவுண்டரிகள் அடக்கம். ஜெகதீசன் 140 பந்துகளில் 168 ரன்கள் எடுத்தார். இதில், 15 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடக்கம்.
இதையடுத்து, கோவா அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
முன்னதாக இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பீகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3வது ஆட்டத்தில் சட்டீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆந்திராவுக்கு எதிரான போட்டியில் நாராயண் ஜெகதீசன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் தமிழக அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்து, சட்டீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் ஜெகதீசன் 107 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம், இந்த வருட விஜய ஹசாரே கிரிக்கெட் போட்டியில் ஜெகதீசன், தொடர்ச்சியாக மூன்று சதங்களை அடித்துள்ளார். கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற விஜய் ஹசாரே போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக, மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், கேரளா ஆகிய அணிகளுக்கு எதிராக மூன்று சதங்களை அடித்திருந்தார்.
ஜெ.பிரகாஷ்
எடப்பாடியுடன் இணைகிறேனா?: டிடிவி தினகரனின் இரண்டு ஆப்ஷன்!
கால்பந்து உலகக்கோப்பை : வரலாற்று பெருமையில் நனையும் கத்தார்!