மிக்ஜாம் புயலாக மாறிய அஜின்கியா பவார்: தமிழ் தலைவாஸ் அபார வெற்றி!

Published On:

| By Selvam

ப்ரோ கபடி தொடரின் 10வது சீசன் கடந்த டிசம்பர் 2 அன்று தொடங்கியது. இந்நிலையில், தமிழ் தலைவாஸ் அணி இந்த தொடரில் தனது முதல் போட்டியில் தபாங் டெல்லி கே.சி அணியை எதிர்கொண்டது. டிசம்பர் 3 அன்று நடைபெற்ற இந்த போட்டி, குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஈ.கே.ஏ அரேனாவில் நடைபெற்றது.

இந்த போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி, நரேந்தர், எம்.அபிஷேக், மோஹித், ஹிமான்ஷு, அஜின்கியா பவார், சாகர் (C) மற்றும் சாஹில் குலியா ஆகிய 7 பேரை கொண்டு களமிறங்கியது. அதேபோல, தபாங் டெல்லி கே.சி அணி நவீன் குமார் (C), மோஹித், ஹிம்மத் அன்டில், அஷு மாலிக், மீது சர்மா, யோகேஷ் மற்றும் விஷால் பரத்வாஜ் ஆகிய 7 பேருடன் களம் கண்டது.

இந்த போட்டியின் துவக்கத்தில், 2 அணிகளுமே தொடர்ந்து சமமான அளவிலேயே புள்ளிகளை சேர்த்துவந்தன. ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து சொதப்பி புள்ளியை இழந்துவந்த தமிழ் தலைவாஸ் அணியின் நட்சத்திர ரைடரான நரேந்தர், ஒரு கட்டத்தில் 2 புள்ளிகளுடன் தனது கணக்கை துவங்கினார். அந்த 2 புள்ளிகள் டெல்லி அணியை நெருக்கடிக்கு தள்ளிய நிலையில், போட்டியின் முதல் ஆல்-அவுட்டை அந்த அணி சந்தித்தது.

அந்த நிலையில், ஆல்-அவுட்டுக்கு பிறகு எக்ஸ்பிரஸ் வீரரான நவீன் குமார் ஒரு சூப்பர் டேக்கிலை நிகழ்த்த, முதல் பாதியில், டெல்லி அணி 14 புள்ளிகளுடனும், தமிழ் தலைவாஸ் அணி 18 புள்ளிகளுடனும் இருந்தது.

அந்த சூப்பர் டேக்கிலுக்கு பிறகு, தமிழ் தலைவாஸ் அணி ஆல்-அவுட்டை நோக்கி தள்ளப்பட்ட நிலையில், களத்தில் கடைசி ஆளாக நின்றுகொண்டிருந்த அஜின்கியா பவார், திடீரென ஒரு சூறாவளியாக மாறி அடுத்தடுத்து 3 ரெய்டுகளில் 5 புள்ளிகளை பெற்றார். அவர் இந்த அதிரடியை தொடர்ந்து, ஒற்றை ஆளாக தபாங் டெல்லி கே.சி அணியை 2வது முறை ஆல்-அவுட் செய்தார்.

இதை தொடர்ந்து, நரேந்தரும் அதிரடியாக விளையாடி சில புள்ளிகளை சேர்க்க, இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 42-31 என்ற புள்ளிகளில் தபாங் டெல்லி கே.சி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும், இந்த ப்ரோ கபடி தொடரின் 10வது சீசனை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

மிக்ஜாம் புயலாக மாறிய அஜின்கியா பவார், 18 ரெய்டு புள்ளிகள் மற்றும் 3 டேக்கில் புள்ளிகள் என மொத்தம் 21 புள்ளிகளை குவித்திருந்தார். நரேந்தர் 8 புள்ளிகளை சேர்த்திருந்தார். டெல்லி அணிக்கு, அந்த அணியின் கேப்டன் நவீன் குமார் 14 புள்ளிகளை சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக அஷு மாலிக் 9 புள்ளிகளை கைப்பற்றியிருந்தார்.

முரளி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திண்டுக்கல் கைது… திக் திக்கில் அமைச்சர்கள்: CBI க்கு மாறுகிறதா ED அதிகாரி கைது வழக்கு?

நான்கு மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share