”ஒரு Cow அதாவது” பெங்களூர் புல்சை பிரியாணி போட்ட தமிழ் தலைவாஸ்

Published On:

| By Manjula

tamil thalaivas bengaluru bulls

நீண்ட நாட்களாகவே பெங்களூர் புல்ஸ் அணி, தமிழ் தலைவாஸ் அணியை சமூக வலைதளங்களில் கலாய்த்து வந்தது.

புரோ கபடி லீக்கின் 10-வது சீசன் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 21-ம் தேதி வரை இந்த புரோ கபடி தொடர் நடைபெறவுள்ளது.

இதில் பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கேசி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்தான், பெங்கால் வாரியர்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ் என 12 அணிகள் களமிறங்கியுள்ளன.

இதில் தமிழ்நாடு சார்பாக தமிழ் தலைவாஸ் அணி விளையாடி வருகிறது. ஆரம்பத்தில் நன்றாக விளையாடி வந்த தலைவாஸ் அணி ஒருகட்டத்தில் தொடர்ந்து தோல்வியைத் தழுவ ஆரம்பித்தது.

குறிப்பாக சொந்த மண்ணான சென்னையில் விளையாடிய ஒரு போட்டியில் கூட, தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறவில்லை.

இதனால் ரசிகர்கள் அணியின் மீது வைத்த நம்பிக்கையை சிறிது, சிறிதாக இழக்க ஆரம்பித்தனர். இதற்காக தலைவாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டது.

அதேபோல நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி 16-ம் தேதி பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் பார்முக்கு வந்தது.

இதற்கிடையில் நேற்று (ஜனவரி 21) ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில், பெங்களூர் புல்ஸ் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றிப்பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறது.

பெங்களூர் அணியை ஆரம்பம் முதலே அடிக்க ஆரம்பித்த தலைவாஸ் அணி இறுதியில் 45 – 28 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரை வீழ்த்தி வெற்றிவாகை சூடியது.

அதோடு கடந்த டிசம்பர் 31-ம் தேதி பெங்களூர் புல்ஸ் அணியிடம், 1 புள்ளி வித்தியாசத்தில் பெற்ற தோல்விக்கும் பழி தீர்த்துக் கொண்டது.

தற்போது புள்ளிப்பட்டியலில் தலைவாஸ் 1௦-வது இடத்தில் இருந்தாலும் 30 புள்ளிகளுடன் உள்ளது.

அடுத்து வருகின்ற 8 போட்டிகளில் தமிழ் தலைவாஸ் இதே முனைப்புடன் விளையாடினால், கண்டிப்பாக பிளே ஆஃப் செல்ல வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

இந்த நிலையில் நேற்று வெற்றி பெற்றது முதல் சமூக வலைதளங்களில் பெங்களூர் புல்ஸ் அணியை, தமிழ் தலைவாஸ் தாளித்து வருகிறது.

கடந்த போட்டியின் போது பெங்களூர் அணி போட்ட மீம்ஸ்களை தேடியெடுத்து தமிழ் தலைவாஸ் அணி சம்பவம் செய்து வருகிறது.

இந்த மீம்ஸ்களை பார்த்த ரசிகர்கள், ”நீ கலக்கு சித்தப்பு” என்றும், ”அட்மின் புல் பார்முல இருக்கீங்க போல” எனவும் கமெண்ட் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழ் தலைவாஸ் அணி அடுத்ததாக தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வருகின்ற 24-ம் தேதி இரவு 9 மணிக்கு,  ஹைதராபாத் கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் எதிர்கொள்கிறது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டி : பாஜகவை தாக்கிய ஸ்டாலின்

வாக்காளர் பட்டியலை திருத்த இன்னும் நேரம் இருக்கிறது: தலைமை தேர்தல் அதிகாரி 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share