செஸ் ஒலிம்பியாட் தொடரை தமிழ்நாடு முழுக்க கொண்டு சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட தம்பி சிலையும், செல்பி பாய்ண்ட்டும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.
1927ஆம் ஆண்டு முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வரும் நிலையில் இந்தியாவில் முதன்முறையாக 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
இந்த மெகா நிகழ்வு குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தம்பி சின்னம்:
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை தமிழ்நாடு முழுக்க கொண்டு சேர்க்கவும், போட்டியை காண வரும் அனைவரையும் வரவேற்கும் விதமாகவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தம்பி சிலையை தமிழ்நாடு அரசு காட்சிப்படுத்தியுள்ளது.

சென்னை:
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரை மக்களிடையே எடுத்து செல்லும் விதமாக சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்கப் பலகையைப் போலவே கருப்பு – வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளில் சாலை ஒளிர்வதால் மக்கள் புகைப்படம் எடுக்க இங்கே குவிந்து வருகின்றனர்.

நம்ம சென்னை செல்ஃபி ஸ்பாட்டிலும் தம்பி சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளிலும் செல்ஃபி பாய்ன்ட் உருவாக்கப்படுள்ளது.

கோயம்புத்தூர் :
கோவை மாநகரின் பல்வேறு பேருந்து நிறுத்தங்களும் சதுரங்கப் பலகையைப் போலவே கருப்பு – வெள்ளை நிறத்தில் மின்விளக்குகளால் வண்ண மயமாக்கப்பட்டுள்ளது. ஐ லவ் கோவை செல்ஃபி பாய்ன்ட்டும் கருப்பு – வெள்ளை நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாலங்களிலும் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சேலம்;
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சதுரங்கப் பலகை அமைப்பில் செல்ஃபி பாய்ன்ட் அமைக்கப்படுள்ளது. மேலும் பத்துக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களில் ஸ்மார்ட் எல்இடி திரைகள் மூலம் சென்னை செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் ஒளிபரப்பப்படுகிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் செஸ் போர்டு வடிவமைப்பில் சின்னமும், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தம்பி சிலையும் அமைக்கப்படுள்ளது. இவற்றை தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

மேலும் தமிழகம் முழுக்க பல்வேறு பள்ளிகளிலும், பொது மக்கள் கூடும் இடங்களிலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதுடன் ராட்சத பலூன்களும், செல்ஃபி பாயின்ட்களும் அமைக்கப்பட்டுள்ளது.
- க.சீனிவாசன்