டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!

Published On:

| By Prakash

டி20 உலகக் கோப்பை முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

அந்த வகையில், முதல் அரையிறுதி ஆட்டம் இன்று (நவம்பர் 9) சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதி வருகின்றன.

இதில் வெற்றி பெறும் அணி, நாளை (நவம்பர் 10) வெற்றி பெறும் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும்.

இந்த நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த நியூசிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க பேட்டர்களாக பின் ஆலன் மற்றும் தேவன் கான்வே ஆகியோர் களமிறங்கினர்.

இதில் ஆலன் 4 ரன்களில் வெளியேற, கான்வே கேப்டன் வில்லியம்சனுடன் கைகோர்த்தார். இருவரும் பொறுப்புணர்ந்து ஆடினர்.

எனினும், கான்வே 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பின் களமிறங்கிய பிலிப்ஸும் 6 ரன்களில் வெளியேற, டேரி மிட்சல் கேப்டனுடன் இணைந்து விளையாடினார்.

இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 எடுத்தது. நியூசிலாந்து அணியில் மிட்சல் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 53 ரன்கள் எடுத்து அசத்தினார்.

கேப்டன் வில்லியம்சன் 46 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்களையும் முகம்மது நவாஷ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன், பாகிஸ்தான் களமிறங்கி விளையாடி வருகிறது.

ஜெ.பிரகாஷ்

T20 WorldCup: இறுதிகட்டத்தில் உலகக்கோப்பை… மழை வந்தால் வெற்றி யாருக்கு?

அவங்கதான் ஜெயிப்பாங்க: சாகித் அப்ரிடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share