டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்12 சுற்றுப் போட்டிகள் அடுத்தகட்டத்தை நோக்கி வேகம் பிடித்துள்ளன.
அந்தச் சுற்றில் இடம்பிடித்திருக்கும் 12 அணிகளும் அரையிறுதிக்குள் நுழைவதற்காகப் போட்டி போட்டு வருகின்றன.
இந்த நிலையில் குரூப் 2இல் இடம்பிடித்திருக்கும் இந்திய அணி, இன்று (நவம்பர் 2) வங்காளதேசத்துடன் மோதி வருகிறது.
ஏற்கெனவே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது.
இதையடுத்து, இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இதையடுத்து இன்று அடிலெய்டில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய இவ்விரு அணிகளுக்கான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியில், ஒரேயொரு மாற்றமாக தீபக் ஹூடாவிற்கு பதிலாக அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார்.
பின்னர் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் வங்கதேச பந்துவீச்சை மிகவும் கவனத்துடனேயே எதிர்கொண்டனர்.
என்றாலும், ரோகித் 2 ரன்களில் வெளியேறினார். அவருக்குப் பின் ராகுலுடன் கைகோர்த்தார் விராட்கோலி. இருவரும் பொறுப்புணர்ந்து ஆடினர்.
இந்த தொடரில் சோபிக்கத் தவறிய, பலரது விமர்சனத்துக்கு ஆளான கே.எல்.ராகுல் இன்றைய போட்டியில் 32 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 50 ரன் எடுத்து அசத்தினார்.
ஆனாலும் அரைசதத்துடன் அவர் வெளியேறினார். ராகுலுக்குப் பிறகு கடந்த போட்டியில் தனி ஒருவனாய் கலக்கிய சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
அதிரடி ஆட்டம் ஆடிய அவர் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அவரின் விக்கெட்டுக்குப் பிறகு வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாய் விளையாடி ரன்ரேட்டை உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அவர் 5 ரன்களில் வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.
அதுபோல் தினேஷ் கார்த்திக்கும், அக்ஸர் பட்டேலும் தலா 7 ரன்களில் வெளியேறினர். இறுதிவரை களத்தில் நின்ற விராட் கோலி 44 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்ததுடன், இந்திய அணி 184 ரன்கள் எடுக்கவும் உதவி புரிந்தார்.
அஷ்வின் 13 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வங்கதேச அணிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. வங்கதேச அணியில் மஹ்முட் 3 விக்கெட்டும், அல்ஹசன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஜெ.பிரகாஷ்
T20 WorldCup 2022: படமெடுக்கும் பங்களாதேஷை அடக்குமா இந்திய அணி?
கே.எல்.ராகுல் ஃபார்முக்கு வர கவாஸ்கர் சொல்லும் வழி!