டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர்12 சுற்றுப் போட்டியில் 4வது லீக் ஆட்டத்தில் இன்று (நவம்பர் 2) இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் விராட் கோலி இறுதிவரை களத்தில் நின்று, 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச பேட்டர்கள், இந்திய பந்துவீச்சை ஆரம்பம் முதலே சிதறடித்தனர். காரணம், அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான புள்ளிப் பட்டியலில் இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது.
இதனால், அந்த அணியும் இன்று ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதையடுத்தே, அந்த அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக ஆடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், 7 ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது அவ்வணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருந்தது.
துவக்க ஆட்டக்காரரான லிதன் தாஸ் 26 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களும், உசைன் சாந்தோ 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை நின்றதையடுத்து, அரை மணிநேரத்துக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வங்கதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.
அந்த வகையில், வங்காளதேச அணி ஏற்கனவே 7 ஓவரில் 66 ரன்கள் எடுத்து இருந்தது. இதன் மூலம் வெற்றிக்கு 54 பந்துகளில் 85 ரன்கள் தேவைப்பட மீண்டும் சாந்தோ – லிதன் தாஸ் ஜோடி களமிறங்கினர்.
இதையடுத்துதான், ஆட்டம் இந்தியாவின் வசம் மாறியது. லிதன் தாஸ் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆக, உசைன் சாந்தோ 21 ரன்களில் வெளியேறினார். அவர்களுக்குப் பிறகு களமிறங்கிய கேப்டன் அல்ஹன், ஹொசைன், யசீர் அலி, உசைன் சைகத் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் கடைசி ஓவரில் (16வது ஓவர் ) அந்த அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் வங்கதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் வங்கதேச அணி 16 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி குரூப் 2 புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்துக்கு 185 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை: மழையால் தடைப்பட்ட இந்தியா-வங்கதேசம் போட்டி!