டி2௦ உலகக்கோப்பை முடிவதற்குள் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினர் ஒரு வழியாகி விடுவார்கள் போல.
கடந்த 2௦23 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் அடுத்தடுத்த தொடர்களுக்கு வீரர்களை தேர்வு செய்வதில், இந்திய தேர்வுக்குழு மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு ரோஹித், கோலி இருவரும் டி2௦ தொடருக்குத் திரும்பி இருக்கின்றனர். அதேநேரம் ஹர்திக், சூர்யகுமார் யாதவ் என அணியின் முக்கிய வீரர்கள் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு மாற்று வீரர்களை தேட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் சிவம் துபே, ரிங்கு சிங் என வாய்ப்பு கிடைத்த வீரர்கள் தங்களை நிரூபித்துக் காட்டியிருப்பதால் உலகக்கோப்பை டி2௦ அணியில் யாரை தேர்வு செய்வது? யாரை விடுவிப்பது? என தேர்வுக்குழுவினர் தீவிர ஆலோசனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்வுக்குழுவிற்கு தற்போது அடுத்த தலைவலி உருவாகி இருக்கிறது. டி2௦ உலகக்கோப்பை தொடருக்கு விக்கெட் கீப்பராக யாரைப் போடுவது? என்பது தான் அது.
தற்போது அணியில் 5 விக்கெட் கீப்பர்கள் இருக்கின்றனர். இதில் இருந்து முக்கியமான விக்கெட் கீப்பர் ஒருவரையும் அவருக்கு மாற்று வீரர் ஒருவரையும் தேர்வு செய்ய வேண்டும்.
அந்த வகையில் 5 விக்கெட் கீப்பர்கள் தற்போது இந்த ரேஸில் உள்ளனர். அவர்களில் யார் இந்திய அணியின் முதல் சாய்ஸாக இருக்கப்போகிறார்கள்? என்பது தான் கேள்வி.
இதில் பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பர் என இரண்டையும் நன்றாக செய்யக்கூடிய ஆற்றல் கே.எல். ராகுலுக்கு உண்டு. என்றாலும் அவரை முழுநேர பேட்ஸ்மேனாக விளையாட வைக்க பிசிசிஐ விரும்புகிறது.
இதேபோல சஞ்சு சாம்சனும் விக்கெட் கீப்பருக்கு நல்ல சாய்ஸ் ஆக இருப்பார். மறுபுறம் இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா என இளம் வீரர்களும் வரிசைகட்டி நிற்கின்றனர்.
இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள ரிஷப் பண்டும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கண்ட ஐவரில் யார் அந்த இருவர்? என்ற கேள்விக்கு விடை ஐபிஎல் தொடருக்கு பின்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா, ” இன்னும் டி2௦ உலகக்கோப்பைக்கு வீரர்களை தேர்வு செய்யவில்லை. ஆடும் களத்தின் தன்மையைப் பொறுத்தே வீரர்கள் தேர்வு அமையும்.
கேப்டன் பொறுப்பில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம் என்னவென்றால் அனைவரையும் உங்களால் சந்தோஷப்படுத்த முடியாது. தேவையான விஷயங்கள் குறித்து மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்,” என தெரிவித்து இருக்கிறார்.
தலைமை பயிற்சியாளர் ராகுல் இதுகுறித்து கூறுகையில், ” நான்கு, ஐந்து தேர்வுகள் இருப்பது நல்லது தான். இன்னும் சில மாதங்கள் பொறுத்து விக்கெட் கீப்பர் யார்? என்பது இறுதி செய்யப்படும்,” என தெரிவித்துள்ளார்.
இதை வைத்துப் பார்க்கும்போது ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், டி2௦ உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது தெரிகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டி.ஆர்.பாலு தலைமையில் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழு!
மிரட்டும் சந்தீப் கிஷனின் ’ஊரு பேரு பைரவகோனா’ டிரைலர்!