டி20 உலகக் கோப்பை தொடருக்கான சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் இன்று (அக்டோபர் 22) தொடங்குகிறது.
இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12சுற்றில் விளையாடவிருக்கின்றன.
சூப்பர் 12சுற்றில் நுழையும் 4 அணிகளுக்கான முதல் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் (அக்டோபர் 21) நடைபெற்று முடிந்தது.
முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12சுற்றுக்கு முன்னேறி மற்ற 8 அணிகளுடன் இணைந்தன.
சூப்பர் 12சுற்று குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்காள தேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இன்று தொடங்கவுள்ள சூப்பர் 12 முதல் போட்டியில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை இருபது ஓவர் கிரிக்கெட்டில் 15ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றது. டையில் முடிந்த மற்றொரு ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து வெற்றி கண்டது.
கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது.
அதற்கு வட்டியும் முதலுமாகப் பதிலடி கொடுக்க நியூசிலாந்து தீவிரம் காட்டுவதால் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
இந்திய அணி நாளை(அக்டோபர் 23) சூப்பர்12 சுற்றில் பாகிஸ்தான் அணியுடன் நேருக்கு நேர் மோதவுள்ளதால் போட்டிகளைக் காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து, ஜிம்பாப்வே