டி20 உலகக்கோப்பை: இந்தியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி தன்னுடைய 3வது லீக் போட்டியில் இன்று (அக்டோபர் 30) தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது.
இவ்விரு அணிகளுக்கான போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் முன்னணி வீரர்கள் பலரும் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு இரையானார்கள். நிலைத்து நின்று ஆடிய சூரியகுமார் யாதவ் மட்டும் 40 பந்துகளில் 68 ரன்களை எடுத்தார்.
மற்ற பேட்டர்கள் எல்லாம் சொற்ப ரன்களிலேயே பெவிலியன் திரும்பினர். தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி 4 விக்கெட்களையும், பர்னல் 3 விக்கெட்களையும் சாய்த்தனர்.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகவும் இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஆரம்பத்திலேயே 2 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி கண்டது.
டிகாக்கும், ரோஸோவும் 2 ஓவர்கள் முடிவதற்குள்ளேயே தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் பவுமாவும் மார்க்ராமும் இணைந்து ரன் வேட்டையில் ஈடுபட்டனர்.
எனினும், அவர்களையும் நீண்ட நேரம் விளையாட விடாமல் இந்திய அணி பவுலர்கள் பிரித்தனர். அதில் மார்க்ராம் மட்டும் அரைசதம் அடித்தார். அவர்41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
அவர்களுக்குப் பின் களமிறங்கிய டி.மில்லரும் அரைசதம் (59 ரன்கள்) அடித்து தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், 19.4 ஓவர்களில் 137 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும், ஷமி, அஸ்வின் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த குறைந்த ரன்களையும் தென்னாப்பிரிக்க அணி எடுக்க விடாமல் நமது பவுலர்கள் சிறப்பாகப் பந்துவீசினர். எனினும், மிக மோசமான ஃபீல்டிங்கால் இந்திய அணி, போராடி தோற்றது.
ஜெ.பிரகாஷ்
கோவை கார் வெடிப்பு: காவல் துறையிடம் கேள்வி கேட்ட அண்ணாமலை
பாஜக நிர்வாகி புகார்: இணையதளம் மீது வழக்குப்பதிவு!