ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8வது டி20 உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக்கோப்பை போட்டி கடந்த அக்டோபர் 16ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் விளையாடுவதற்கு ஏற்கெனவே 8 அணிகள் நேரிடையாக தகுதி பெற்றுவிட்டன.
இதையடுத்து, மற்ற 8 அணிகளில் சூப்பர் 12 சுற்றில் விளையாடுவதற்காக அடுத்த 4 அணிகளைத் தேர்வு செய்யும் முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், குரூப் ‘ஏ’ வில் நமீபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், பி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன.
முதல் சுற்றில் ஏ பிரிவில் 3 ஆட்டங்களில் தலா 2 வெற்றிகளுடன் இலங்கையும், நெதா்லாந்தும் முறையே முதலிரு இடங்களை உறுதி செய்து சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறின.
சூப்பா் 12 பிரிவில் இலங்கை அணி, குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இணைந்துள்ளது. நெதா்லாந்து அணி குரூப் 2இல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய அணிகளுடன் இணைந்துள்ளது.
அதுபோல் முதல் சுற்றில் பி பிரிவில் அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது. 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலககோப்பையிலிருந்து வெளியேறியது.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 147 ரன்களை, 17.3 ஓவர்களிலேயே எடுத்த அயர்லாந்து அணி அவ்வணியையும் வீட்டுக்கு அனுப்பியது.
அதுபோல் பி பிரிவின் கடைசி முதல் சுற்றுப் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் களம் கண்டன. இதில் ஸ்காட்லாந்து நிர்ணயித்த 133 ரன்களை 18.2 ஓவர்களில் ஜிம்பாப்வே எடுக்க, அடுத்த சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது. சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணி குரூப் 2விலும், அயர்லாந்து அணி குரூப் 1லிம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கெனவே சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை, நெதர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்ற நிலையில், தற்போது ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளும் சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, இன்று முதல் சூப்பர் 12 போட்டிகள் தொடங்க உள்ளன.
ஜெ.பிரகாஷ்
முடிவுக்கு வரும் தென்காசி வடக்கு திமுக பஞ்சாயத்து! மா. செ. ரெடி!