ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி பிரமாண்டமாக துவங்கிய டி20 உலகக்கோப்பை பரபரப்பான திருப்பங்களுடன் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.
நொடிப்பொழுதில் ஆட்டத்தின் தன்மையை மாற்றக்கூடிய இது போன்ற டி20 ஆட்டங்களில் ஒரு அணியின் கேப்டன் மிகுந்த கவனத்துடனும் , போட்டியின் போது ஏற்படும் அழுத்தத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுவது மிக முக்கியம்.
தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஒரு உலகக்கோப்பையை தாண்டி அடுத்த உலகக்கோப்பையில் கேப்டனாக செயல்பட முடியும்.
அந்த வகையில் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன்களை பற்றி இங்கே பார்ப்போம்:
குமார் சங்கக்கார
இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான குமார் சங்கக்கார 2009 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற 3 டி 20 உலகக்கோப்பைகளில் 14 போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கிய இவர் அந்த அணிக்கு 10 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.
4 தோல்விகளை சந்தித்தாலும் 2009 மற்றும் 2012 ஆகிய உலகக் கோப்பைகளில் இலங்கையை பைனல் வரை அழைத்துச் சென்ற பெருமையை பெற்றுள்ள அவர் டி20 உலகக்கோப்பைகளில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இலங்கை கேப்டனாகவும் அசத்தியுள்ளார்.
டேரன் சம்மி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக திகழ்ந்த இவர் 2012, 2014, 2016 ஆகிய 3 உலகக்கோப்பைகளில் அந்த அணியின் கேப்டனாக களமிறங்கிய 18 போட்டிகளில் 11 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் கிறிஸ் கெயில், பிராவோ என சாம்பியன் வீரர்களை தலைமை தாங்கிய அவர் இந்த பட்டியலில் இருக்கும் இதர கேப்டன்களை விட 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் 2 உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் உலக சாதனை படைத்துள்ளார்.
கிரேம் ஸ்மித்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக சாதனை படைத்த இவர் டி20 உலகக்கோப்பையிலும் கடந்த 2007 – 2010 வரையிலான காலகட்டத்தில் தலைமை தாங்கிய 16 போட்டிகளில் 11 வெற்றிகளை பெற்றுத்தந்ததன் மூலம் அதிக வெற்றிகளை பதிவு செய்த தென்னாப்பிரிக்க கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.
கேன் வில்லியம்சன்
நியூசிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரமாக வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் இவர் கடந்த 2016 முதல் இந்த உலகக்கோப்பை வரை கேப்டன்ஷிப் செய்த 16 போட்டியில் 14 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
எம்எஸ் தோனி
தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நீண்ட காலம் கேப்டனாக நீடிக்க முடியும். அந்த வகையில் கடந்த 2007 இல் தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் டி20 உலகக்கோப்பையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய தோனி பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரில் ஜோவிந்தர் சர்மாவை பயன்படுத்தியது உட்பட முக்கிய முடிவுகளை எடுத்து முதல் வருடத்திலேயே கோப்பை வென்று சரித்திரம் படைத்து காட்டினார்.
அந்த வெற்றியால் 2016 வரை நடைபெற்ற அத்தனை உலகக்கோப்பைகளிலும் கேப்டனாக செயல்பட்ட அவர் 33 போட்டிகளில் 20 வெற்றிகளை பெற்றுத்தந்ததன் மூலம் டி20 உலகக்கோப்பையில் அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டனாக உலக சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பொன் மாணிக்கவேல் வழக்கு – சிபிஐ விசாரணை!
T20 Worldcup 2022 : அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா!