டி20 உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளனர்.
கோப்பையை வென்ற இந்தியா
2024ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று (ஜூன் 29) நடைபெற்றது. இதில், இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
மேற்கிந்திய தீவுகளில் உள்ள கென்சிங்டன் ஓவல் பார்படாஸ் மைதானத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.
அதில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது.
விராட் கோலி ஓய்வு
இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி 76 ரன்களை எடுத்து, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அப்போது பேசிய விராட் கோலி, “இதுதான் எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர். இதைத்தான் நான் சாதிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ரன்களை எடுக்கவே முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம். கடவுள் மிகப் பெரியவர். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற நிலையில் தான் நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பை போட்டியை விளையாடினோம்.
இந்திய அணிக்காக நான் விளையாடும் கடைசி டி20 உலகக்கோப்பை போட்டி இதுதான். உலகக்கோப்பையை என் கைகளில் ஏந்த வேண்டும் என்று விரும்பினேன். அது தற்போது நடந்துவிட்டது. அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு நாம் வழிவிட வேண்டும்.
அடுத்த தலைமுறையினர் டி20 ஆட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இது ஒரு நீண்ட பயணம். ஐசிசி கோப்பையை வெல்வதற்கான எங்களது நீண்ட பயணம். ரோகித்திற்கு இது 9வது டி20 உலகக்கோப்பை தொடர். எனக்கு 6வது தொடர்.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கடினம். இந்த நாள் என் வாழ்க்கையில் அற்புதமான நாள். இதற்காக நான் என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று கூறினார்.
ரோகித் சர்மா ஓய்வு
விராட் கோலி ஓய்வை அறிவித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வையும் அறிவித்தார்.
அவர் பேசியதாவது, “இதுவே எனது இறுதி போட்டி. ஓய்வை அறிவிக்க இதனை விட மிக சிறந்த தருணம் இல்லை. டி20 போட்டிகளில் இருந்து “குட் பை” சொல்வதற்கு இதுவே சரியான நேரம். உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று மிக அதிகமாக விரும்பினேன். இதை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம்.
நான் விரும்பியது, நடந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கையில் இது நடக்குமா என்று பலமுறை நம்பிக்கை இல்லாமல் இருந்துள்ளேன். ஆனால், தற்போது அதை வென்றுள்ளோம். இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை” என ரோகித் சர்மா தெரிவித்தார்.
டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை ஒட்டுமொத்த இந்தியாவே கொண்டாடி வரும் நிலையில், ரோகித், விராட் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
45 நாட்களுக்கு மின்சார உற்பத்தி நிறுத்தம்: மின் பற்றாக்குறை ஏற்படுமா?
வேலைவாய்ப்பு : இந்தியன் வங்கியில் பணி!