Sri Lanka vs South Africa – T20 World Cup 2024: 2024 டி20 உலகக்கோப்பையின் 4வது போட்டியில், குரூப் டி பிரிவில் இருந்து இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்டன.
இந்த தொடரில், 2 பெரிய அணிகள் மோதிக்கொள்ளும் முதல் போட்டி என்பதால், இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு மிகுதியாக இருந்தது.
நியூ யார்க்கில் உள்ள நசவ் கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் வனிது ஹசரங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி வீரர்கள், எதிர்பார்ப்புக்கு மாறாக தென் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
முதல் 10 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 40 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
தென் ஆப்பிரிக்கா அணியின் மிரட்டலான பந்துவீச்சு தொடர, அந்த அணி 19.1 ஓவர்களில் 77 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 19 ரன்கள் சேர்த்திருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்காக அன்ரிச் நோர்ட்ஜே 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே வழங்கி 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
பின் 78 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியும், இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு எதிராக கடுமையான தடுமாற்றத்தை சந்தித்தது.
பவர்-பிளேவில் 2 விக்கெட்களை இழந்த இந்த அணி, 10 ஓவர்களில் 47 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.
பின் குவின்டன் டி காக் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹெய்ன்ரிச் கிளாஸன் பொறுப்பாக விளையாடி 19 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி இலக்கை 16.2 ஓவர்களில் கடந்தது.
6 விக்கெட் வித்தியாச வெற்றியுடன், தனது 2024 டி20 உலகக்கோப்பை பயணத்தை தென் ஆப்பிரிக்கா துவங்கியுள்ளது. தனது மிரட்டலான பந்துவீச்சிற்காக, அன்ரிச் நோர்ட்ஜே இப்போட்டிக்கான ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மாங்கொட்டை வற்றல் களனி
தோனி பாணியில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்
நாளை ரிசல்ட் : எடப்பாடியும் தியானம்!
சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை… ஆராதனா, குகன் ஹேப்பி!