ஆஸ்திரேலியாவில் இன்று (அக்டோபர் 16) முதல் துவங்கும் நடப்பு டி20 உலகக் கோப்பை குறித்த முழு தகவலையும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த ஐசிசி 8வது உலகக்கோப்பை போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
நவம்பர் 13 ஆம் தேதி வரை சுமார் ஒரு மாத காலம் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமிறங்குகின்றன.
முதல் நாள் போட்டிகள்!
இந்நிலையில் இன்று தொடங்கும் முதல் சுற்று குரூப் ஏ ஆட்டத்தில் ஜிலாங்கில் உள்ள கார்டினியா மைதானத்தில் இலங்கை அணி நமீபியாவை எதிர்கொள்கிறது.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் சமீபத்தில் ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதே போல் மதியம் 1.30 மணிக்கு சைமண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டி20 உலகக் கோப்பை 2022 தகுதிப் பாதை!
நவம்பர் 12, 2021 நிலவரப்படி ஐசிசி டி20 தரவரிசையின் அடிப்படையில் முதல் 8 அணிகள் 2022 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றன.
அதன்படி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டிகளின் மூலம் நமீபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
முதல் சுற்று எப்படி நடைபெறுகிறது?
முதல் சுற்று போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி இலங்கை, நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.
பி பிரிவில் மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் உள்ளன.
முதல் சுற்று ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். ஒவ்வொரு அணியும் அதன் குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் விளையாடும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கும் நிகழ்வின் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
முதல் சுற்று போட்டியில் ஏ பிரிவில் முதலிடத்தைப் (A1) பெறும் அணியும், பி பிரிவில் இரண்டாவது (B2) இடத்தைப் பிடிக்கும் அணியும் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் சூப்பர் 12 சுற்றில் விளையாடும் குரூப் 1ல் சேரும்.
அதேபோல், முதல் சுற்று போட்டியில் பி பிரிவில் முதலிடத்தைப் (B1)பெறும் அணியும், ஏ பிரிவில் இரண்டாவது (A2) இடத்தைப் பிடிக்கும் அணியும் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் குரூப் 2ல் சேரும்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 குரூப்!
குரூப் 1 – இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், A1 மற்றும் B2
குரூப் 2 – இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம், B1 மற்றும் A2
சூப்பர் 12 சுற்று எப்படி நடைபெறுகிறது?
சூப்பர் 12 சுற்றின் போது, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும். எனவே, ஒவ்வொரு அணியும் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
இந்திய அணியின் முதல் போட்டி!
கடந்த ஆண்டு போலவே நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வரும் அக்டோபர் 23-ம் தேதி சந்திக்கிறது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு மண்ணில் நடந்த உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
அந்த தொடரில் அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் நாடு திரும்பியது. மேலும் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரிலும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி கண்டது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்தியா மோதும் ஆட்டங்கள்!
அக்டோபர் 23 – இந்தியா vs பாகிஸ்தான் (16வது போட்டி, சூப்பர் 12) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் பிற்பகல் 1:30
அக்டோபர் 27 – இந்தியா vs A2, (23வது போட்டி, சூப்பர் 12) சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி மதியம் 12:30
அக்டோபர் 30 – இந்தியா vs தென்னாப்பிரிக்கா, (30வது போட்டி, சூப்பர் 12) பெர்த் ஸ்டேடியம், பெர்த் மாலை 4:30
நவம்பர் 2 – இந்தியா vs பங்களாதேஷ், (35வது போட்டி, சூப்பர் 12) அடிலெய்டு ஓவல், அடிலெய்டு பிற்பகல் 1:30
நவம்பர் 6 – இந்தியா vs B1, (42வது போட்டி, சூப்பர் 12) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன் பிற்பகல் 1:30
டி20 உலகக் கோப்பை பரிசுத் தொகை!
2021ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பின்பற்றப்பட்ட அதே பரிசுத் தொகை தான் தற்போதும் பின்பற்றப்பட உள்ளது.
தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் 45 கோடியே 67 லட்சத்து 17 ஆயிரத்து 240 ரூபாய்) ஆகும்.
அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13.04 கோடி) பரிசு வழங்கப்படும்.
2-வது இடம் பிடிக்கும் அணிக்கு அதில் பாதி தொகையான 8 லட்சம் அமெரிக்க டாலரும் (இந்திய ரூபாய் மதிப்பில் 6.5 கோடி) பரிசு வழங்கப்படும்.
அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் (இந்திய ரூபாய் மதிப்பில் 3.26 கோடி) வழங்கப்படுகிறது.
சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 57.6 லட்சம்) வழங்கப்படும்.
மேலும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 32.9 லட்சம்) வழங்கப்படும்.
2022 டி20 உலகக் கோப்பையை எதில் கண்டுகளிக்கலாம்?
இந்தியாவில் உலகக் கோப்பை போட்டிகளை ஸ்டார் நெட்வொர்க் சேனலில் காணலாம். மேலும் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
காந்தாரா பான் இந்திய படமாக வெளியிடாதது ஏன்?: ரிஷப் ஷெட்டி
உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல: புதின்