டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணிக்கு ரூ. 3.22 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்க இருக்கிறது.
நடப்பு ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் நாளையுடன் (நவம்பர் 13) நிறைவுபெற இருக்கிறது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் களம் காண உள்ளன.
இந்த தொடரில், பல எதிர்பாராத திருப்புமுனைகள் ஏற்பட்டு பலம் வாய்ந்த அணிகள் கூட உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, நியூசிலாந்து ஆகிய அணிகள்கூட இதிலிருந்து வெளியேறின.
2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடியான பேட்டிங், சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறாமல் உலகக் கோப்பை தொடரை விட்டே வெளியேறியது.
இந்நிலையில் அரையிறுதி வரை வந்த இந்திய அணிக்கு ரூ. 3.22 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைக்க இருக்கிறது.
இந்த ஆண்டு கோப்பையை வென்று தொடரைக் கைப்பற்றும் அணிக்கு 1.6 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைக்கும். அதாவது இந்திய மதிப்பில் 13 கோடி ரூபாய் பரிசுத் தொகையாகக் கிடைக்கவுள்ளது.
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும் அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறும் இரண்டு அணிகளுக்கும் தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படும்.
அந்த வகையில் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் தலா ரூ. 3.22 கோடி ரூபாய் பரிசுத் தொகையாகக் கிடைக்க உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு, ஒரு போட்டிக்கு 40 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும்.
இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அதற்கு மொத்தமாக இந்திய மதிப்பில் 1 கோடியே 28 லட்சம் பரிசாகக் கிடைக்கும்.
ஆகையால் இந்த தொடரில் இந்திய அணிக்கு மொத்தம் ரூ. 4 கோடியே 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கிடைக்கும்.
மோனிஷா
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஐசிசி அறிவித்த அதிரடி மாற்றம்!
ஃபிஃபா உலகக் கோப்பை: வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் ஜியோ!