அயர்லாந்து அணிக்கு எதிராக நேற்று (ஆகஸ்ட் 20) நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் 2-வது போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களமிறங்கினர்.
18 பந்துகளில் 1 சிக்சர் 2 பவுண்டரிகள் என மொத்தம் 18 ரன்கள் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் தன்னுடைய அதிரடியை வெளிப்படுத்தினார்.
அவர், 43 பந்துகளில் 1 சிக்சர் 6 பவுண்டரிகள் என மொத்தம் 58 ரன்களை குவித்தார்.
அடுத்து வந்த திலக் வர்மா, 1 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் சஞ்சு சாம்சனும், ருதுராஜ் கெய்க்வாடும் இணைந்து 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சஞ்சு சாம்சன், 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரிங்கு சிங் மற்றும் ஷிவம் துபே இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிங்கு சிங் 21 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி என மொத்தம் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபே, 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 185 ரன்கள் எடுத்தது.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ பால்பிர்னி பொறுமையாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்,
கேம்பர் மற்றும் டோக்ரெல் உடன் இணைந்த அவர் 35 ரன்கள் மற்றும் 52 ரன்கள் என பார்ட்னர்ஷிப் அமைத்தார். தனது அதிரடி பேட்டிங் பாணியால் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தினார்.
51 பந்துகளில் 72 ரன்களை எடுத்த அவர், அர்ஷ்தீப் வேகத்தில் ஆட்டமிழந்தார். . அவர் ஆட்டமிழந்த போது அந்த அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.
இப்படியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. அதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
இருதலைக் கொள்ளி எறும்பு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்?