T20

முதல் டி20: இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி விட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20  தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் மூன்று ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸிலும், கடைசி இரண்டு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று (ஜூலை 29) இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சூர்யகுமார் யாதவ் 24 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்ரேயஸ் அய்யர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரை சதம் அடித்தார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 41 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. 

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் சமார் புரூக்ஸ் களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் 15 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேற அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் ரன் ஏதுமின்றி, ஜடேஜாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். சமார் புரூக்ஸ் 20 ரன்களிலும், கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் அணியின் ரன் வேகம் குறைந்தது. இந்த நிலையில் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 122 ரன்கள் மட்டுமே சேர்ந்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் மார்ட்டின் கப்திலை பின்னுக்கு தள்ளி ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தார். முன்னதாக ரோஹித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்தபோது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த கப்திலை பின்னுக்கு தள்ளினார். 

ரோஹித் சர்மா இதுவரை 129 டி20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,443 ரன்கள் எடுத்துள்ளார்.இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே கப்தில் (3,399 ரன்), விராட் கோலி (3,308 ரன்) ஆகியோர் உள்ளனர்.

– ராஜ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts