இந்திய அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.
முன்னதாக, நடைபெற்ற 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தன. இச்சூழலில் கடைசி போட்டியில் வெற்றி பெரும் அணியே தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான கடைசி டி20 போட்டி ஃபுளோரிடாவில் நேற்று (ஆகஸ்ட் 13) நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 45 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரிகள் என மொத்தம் 61 ரன்கள் விளாசினார்.
பின்னர், 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 55 பந்துகளில் 6 சிக்சர் 5 பவுண்டரிகள் என மொத்தம் 85 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.
அவருடன் களம் கண்ட மேயர்ஸ் 5 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்னர் பிராண்டன் கிங் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார்.
அதிரடியாக விளையாடிய அவர் திலக் வர்மா வீசிய ஓவரில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த ஷாய் ஹோப், பிராண்டன் கிங்கிற்கு உறுதுணையாக ஆடினார்.
இறுதியாக 18-வது ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் விளாசி ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது.
முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அலங்கார வார்த்தைகளால் ஏமாற்றும் திமுக: அண்ணாமலை விமர்சனம்!
கிச்சன் கீர்த்தனா: மிக்ஸ்டு நட்ஸ் மில்க்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!