தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் 2ஆவது போட்டியில் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற டி20 தொடர் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நேற்று (அக்டோபர் 2) 2 ஆவது போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் தேம்ம பவுமா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கி அதிரடியாக விளையாடினர்.
8 ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள், 1 சிக்சர் உட்பட 21 ரன்களை இந்த கூட்டணி எடுத்திருந்தது.
தொடர்ந்து விளையாடிய கே.எல். ராகுல் 24 ரன்களில் அரைசதம் எடுத்து அசத்தினார். ஆனால், 37 பந்துகளில் 43 ரன்களை எடுத்திருந்த கேப்டன் ரோகித் சர்மா மகாராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்த பேட்ஸ்மேனாக விராட் கோலி களமிறங்கி கே.எல். ராகுலுடன் ஆட்டத்தை தொடர்ந்தார்.
அதிரடியாக விளையாடி கொண்டிருந்த கே.எல். ராகுல் 4 சிக்சர், 5 பவுண்டரிகளை விளாசி 57 ரன்களில் வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் அரைசதம்
இதனைத் தொடர்ந்து, விராட் கோலி சூர்யகுமார் யாதவ் உடன் சேர்ந்து ஆட்டத்தைத் தொடர்ந்தார்.
தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை 360 டிகிரி கோணத்தில் பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
அசத்தலாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 5 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் விளாசி 61 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். விராட் கோலி 28 பந்துகளில் 49 ரன்களும் , தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
238 ரன்கள் இலக்கு
ஒட்டுமொத்தமாக 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது இந்திய அணி.
இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா அணிக்கு 238 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாஹார் பந்து வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டை இழந்தது.
இதனையடுத்து இரண்டாவது ஓவரில் பந்து வீசிய அர்ஷிதீப் சிங், ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர்.
டேவிட் மில்லர் சதம்
தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் 46 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இருப்பினும் 20 ஓவர் இறுதியில் 3 விக்கெட்டை இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா அணி.
இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது.
இதன் மூலம் முதன் முறையாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.
மேலும், டி20 தொடரில் 11000 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் விராட் கோலி.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க…!
கிச்சன் கீர்த்தனா : நாவல்பழ லஸ்ஸி!