ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன், சையத் முஷ்டாக் அலி தொடரில் கோவா அணியில் அசத்திவருகிறார்.
15வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று (அக்டோபர் 11) தொடங்கியது. இந்த தொடர், ஜெய்ப்பூர், மொகாலி, இந்தூர், லக்னோ, ராஜ்கோட் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம்பிடித்து அசத்தி வருகிறார் என்பதுதான் அசத்தலான செய்தி.
இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர், கடந்த ஆண்டு (2021) நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில், மும்பை அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த அணிக்காக ஆடிய அவர், சிறந்தளவில் கோலோச்சவில்லை. ஹரியானா அணிக்கு எதிராக பந்துவீசிய அவர், 34 ரன்களை வாரி வழங்கியதுடன், 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார்.
அதுபோல் புதுச்சேரி அணிக்கு எதிராக 33 ரன்களை விட்டுக்கொடுத்து, 1 விக்கெட் மட்டும் எடுத்தார். தவிர, அந்த அந்த இரண்டு போட்டிகளிலும் மும்பை தோற்றிருந்தது. இதன்பிறகு 2021 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, ரூ. 20 லட்சத்துக்கு அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டார்.

அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த தொடரில் எந்த ஆட்டத்திலும் விளையாடாமல் நாடு திரும்பினார்.
இதற்கிடையே கடந்த வருடம் மும்பை ரஞ்சி அணியிலும் இடம்பிடித்திருந்தார், அர்ஜுன். தொடர்ந்து, 2022 ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்துக்கு அர்ஜுனை மீண்டும் தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் அதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப் படாததால் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று முதல் தொடங்கியுள்ள சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர், முதல் இரு ஆட்டங்களிலும் நன்றாகப் பந்து வீசி அசத்தியுள்ளார்.
இந்த தொடரில் திரிபுராவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அதுபோல் இன்று (அக்டோபர் 12) மணிப்பூருக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். தவிர, இந்த இரண்டு ஆட்டங்களிலும் கோவா வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அர்ஜுன் டெண்டுல்கர் அதிக உற்சாகத்தில் இருக்கிறார்.
ஜெ.பிரகாஷ்
“குல்தீப் இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கை” : அஷ்வின்
டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த மாயாஜால வீரர்கள்!