டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் சிறந்த பேட்ஸ்மேன்களில் இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியில் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்ய குமார் யாதவ், இந்தியாவின் 360 டிகிரி, ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
இவர் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் கடைசி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அந்த போட்டியில் 188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்காக சூர்ய குமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்களை எடுத்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பேட்ஸ்மேன் பட்டியல்
இதனைத் தொடர்ந்து டி20 தொடர் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் சூர்ய குமார் யாதவ் முன்னேற்றம் அடைந்துள்ளார். இதற்கான பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திலிருந்த சூர்யகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலிருந்த பாபர் அசாம் மற்றும் மூன்றாவது இடத்திலிருந்த எய்டன் மார்க்ரமை ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று (செப்டம்பர் 28) டி20 போட்டியிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று நடைபெறும் டி20 போட்டியில் சிறப்பாக ஆடினால் பாபர் அசாம் மீண்டும் தரவரிசையில் முன்னேற வாய்ப்புள்ளது.
தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 861 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
டி20 தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் சூர்ய குமார் யாதவை தவிர வேறு எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 613 புள்ளிகளுடன் 13 ஆவது இடத்திலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 606 புள்ளிகளுடன் 15 ஆவது இடத்திலும் உள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியல்
டி20 போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா வீரர் 737 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய பந்துவீச்சாளர்களில் டாப் 10 வரிசையில் புவனேஷ்வர் குமார் மட்டுமே உள்ளார்.
ஆனால் தற்போது வெளியான தரவரிசை பட்டியலில் ஒரு இடம் பின்தங்கி 658 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளார்.
டி20 ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா 5வது இடத்தில் உள்ளார்.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் : மெட்ரோ முக்கிய அறிவிப்பு!