ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலியே தடுமாறிய பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் கொஞ்சமும் பயமின்றி அட்டகாசமாக பேட்டிங் செய்தவர் சூர்யகுமார் யாதவ்.
மௌன்ட் மௌங்கனியில் நியூசிலாந்துக்கு எதிராக விதவிதமான ஷாட்டுகளை விளாசி டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த சதம் அனைவரது பாராட்டுகளை பெற்றது. அதனால் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அழைக்கப்படும் சூர்ய குமார் யாதவ், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற மகத்தான வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.
குறிப்பாக ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தனது வளர்ச்சியில் ஒரு அண்ணனைப் போல் முக்கிய பங்காற்றியதாக தெரிவிக்கும் அவர் விராட் கோலியுடன் சேர்ந்து பேட்டிங் செய்வது மிகவும் மகிழ்ச்சியான நேரமென்று கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் நெகிழ்ச்சியுடன் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டமாகும். அவர்கள் இருவருமே வித்தியாசமான சர்வதேச கிரிக்கெட்டர்கள்.
அவர்கள் செய்துள்ள சாதனைகளை என்னால் சாதிக்க முடியுமா என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் சமீப காலங்களில் விராட்டுடன் நான் சில அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியுள்ளேன். அவருடன் இணைந்து விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியான தருணமாகும்.

மேலும் ரோகித் சர்மா என்னுடைய பெரிய அண்ணன் போன்றவர். அதனால் எனக்கு போட்டியை பற்றிய சந்தேகம் ஏற்படும் போது நான் அதை அவரிடம் நேரடியாக கேட்டு விடுவேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் 2018 ஆம் ஆண்டு இணைந்தது முதல் அவர் தான் என்னை பின்புலத்திலிருந்து வழி நடத்தும் சக்தி.
2018 இல் கொல்கத்தா அணியிலிருந்து மும்பைக்கு வருவதற்கு முன்பாக பேட்டிங் வரிசையில் நான் மேலே களமிறங்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் ,மும்பை அணியில் நான் கேட்காமலேயே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அந்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்ட நான் அதன்பின் திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டேன். சொல்லப் போனால் என்னுடைய கேரியரில் மேலே ஏறுவதற்கு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தான் எனக்கு நிறைய வசதிகளை செய்து கொடுத்தது” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மெஸ்ஸி டாட்டூ: நிரம்பி வழியும் ரசிகர் கூட்டம்!