ஏற்கனவே அரையிறுதியில் இடம் உறுதியாகிவிட்ட நிலையில் இந்தியாவும், டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்ட நிலையில் ஜிம்பாவேயும் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று (நவம்பர் 06) மோதின.
மெல்போர்னில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இங்கிரவா போட்ட முதல் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காத நிலையில், 2வது ஓவரில் தான் இந்தியா ரன் கணக்கை தொடங்கியது.
இந்த உலகக்கோப்பையில் தடுமாறி வரும் ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் விரைவாக விக்கெட்டை பறிகொடுத்து 15 ரன்னில் வெளியேறினார்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ராகுலுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் சிறப்பாக ஆடி வந்த நிலையில் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 26 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
அவரை தொடர்ந்து 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்து கே.எல் ராகுல் 51 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
பின்னர் இந்த ஆட்டத்தின் மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் பதில் களமிறங்கிய பண்ட் 3 ரன்களிலேயே நடையை கட்டினார்.
இதனால் 14 ஓவர்களில் 103 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தது.
எனினும் அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்தனர்.
இதுவரை ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்த ஆட்டம் இருவரது வருகைக்கு பின் சரவெடியாய் வெடிக்க ஆரம்பித்தது.
பாண்டியா ஒருபுறம் பொறுமையாக விளையாடினாலும், மறுபுறம் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் நான்கு பக்கங்களும் வாணவேடிக்கை காட்டினார்.

இருவரின் சிறப்பான பங்களிப்பால் இந்தியாவின் ரன் வேகம் அதிகரித்த நிலையில், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 186 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தாலும், சூறாவளியாய் சுழன்ற சூர்ய குமார் அதில் 18 ரன்கள் குவித்த நிலையில் அரைசதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா