இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் புதிய உணவகத்தை திறந்துள்ளார்.
சுரேஷ் ரெய்னா 2003-ஆம் ஆண்டு ரஞ்சி டிராஃபியில் விளையாடி கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் தேர்வுக்குழுவினரால் கவரப்பட்ட சுரேஷ் ரெய்னா 2005-ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
மிடில் ஆர்டரில் ஆடும் சுரேஷ் ரெய்னா அணி நெருக்கடியான சூழலை சந்திக்கும் போது தனது அபாரமான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீட்பார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த ரெய்னா, குட்டி தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
2020-ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். 2015-ஆம் ஆண்டு பிரியங்காவை திருமணம் செய்த ரெய்னா Maatecare, gfcare ஆகிய நிறுவனங்களில் துணை நிறுவனராக உள்ளார்.
கிரிக்கெட் ஆட்டக்காரர் என்பதை தாண்டி சுரேஷ் ரெய்னா உணவு பிரியர். விதவிதமான உணவுகளை தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருவார்.
இந்தநிலையில் சுரேஷ் ரெய்னா நெதர்லாந்தில் புதிய உணவகம் துவங்கிய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ரெய்னா உணவு சமைக்கும் புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
புதிய உணவகம் திறந்தது குறித்து சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆர்ம்ஸ்ட்டர்டாமில் உள்ள ரெய்னா இந்தியன் உணவகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். உணவு மற்றும் சமையலில் எனக்கு ஆர்வம் அதிகம்.
பல ஆண்டுகளாக உணவின் மீது நான் கொண்ட அன்பையும் எனது சமையல் சாகசத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இப்போது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஐரோப்பாவில் இந்தியாவின் சுவையை கொண்டு வரும் பணியில் இருக்கிறேன்.
இந்த பயணத்தில் என்னுடன் இணையுங்கள். உற்சாகமூட்டும் புதிய அப்டேட்டுகளுக்காகவும் ரெய்னா உணவகத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழாவிற்காகவும் காத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
புதிய தேர்வுக்குழு தலைவர்: பிசிசிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம்” – ராகுல் காந்தி