பாலியல் புகார் விவகாரத்தில் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்த வழக்கில் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 25) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும்,
அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட,
மல்யுத்த வீரர்கள்/வீராங்கனைகள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மேரி கோம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.
எனினும் பாலியல் புகார் தெரிவித்து 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லாத நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்கள் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான புகார்கள் மற்றும் புகார் வழங்கியவர்களின் விபரங்கள் உள்ளிட்டவை அடங்கிய ஆவணங்கள் தலைமை நீதிபதியிடம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த நோட்டீஸ் மீது இந்திய மல்யுத்த கூட்டமைப்பும், அதன் தலைவர், டெல்லி காவல்துறை மற்றும் டெல்லி அரசாங்கம் ஆகியவை வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்க : கமல்
விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா வைரல் டான்ஸ் வீடியோ!