விராட் கோலிக்கு ஆதரவாகவும் அவரை விமர்சிக்கும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசியுள்ளார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் சதம் அடிக்காமல் சற்று தடுமாற்றத்தை சந்தித்து வந்தார்.
ஆனால் அந்த சறுக்கலில் இருந்து மீண்ட கோலி ஆசியக்கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்தார்.
அதனை தொடர்ந்து கடந்த மாதம் வங்காளதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் சதம் அடித்த அவர் தற்போது இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தார்.
அப்போது, கிரிக்கெட் ரசிகர்களிடம் செய்தியாளர்கள் விராட் கோலியின் சதத்தை பற்றி கேட்ட போது ’ பிளாட் பிட்ச், எதிரணி வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை அதனால் தான் கோலி சதம் அடித்துள்ளார்’ என்று கூறினார்கள்.
இதனை அடுத்து சச்சினின் சாதனைகளுடன் விரட்கோலியை ஒப்பிட்டு அவருடைய ரசிகர்கள் சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வந்தனர்.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ’சச்சினை விராட் கோலியுடன் எப்படி ஒப்பிடுவீர்கள்? விராட் கோலி 200 சதம் அடித்தால் கூட சச்சினிடம் நெருங்க முடியாது’ என்று விமர்சனங்களை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விராட் கோலிக்கு வழங்க வேண்டிய பெருமையை பலர் வழங்குவதில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் விராட் கோலி குறித்தும், அவரை விமர்சிக்கும் விமர்சகர்களையும் சாடியுள்ளார்.
இதுபற்றி அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் நேற்று (ஜனவரி 12) பேசினார் அப்போது ” விராட் கோலி சதம் அடித்தால் மட்டும் அது பிளாட் பிட்ச், எதிரணி வீரர்கள் சரியாக பந்து வீசவில்லை என்று பலரும் குறை கூறுகின்றனர்.
ஆனால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் மட்டும் அடிக்கவில்லை 73 முறை சதம் அடித்துள்ளார்.
நீங்கள் கூறுவது போல இருந்தால் ஒரு சில சதங்கள் மட்டுமே அவரால் அடித்திருக்க முடியும்.
ஆனால் விராட் கோலி உலகின் முன்னணி பவுலர்களுக்கு எதிராகவும் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளார்.
அதேபோன்று உலகின் எந்த மைதானமாக இருந்தாலும் சிறப்பாக விளையாடி சதங்களை விளாசி இருக்கிறார்.
அவருக்கு உண்டான பெருமை தரவில்லை என்றாலும் விமர்சிக்க வேண்டாம் என்று சல்மான் பட் வேண்டுகோள் வைத்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்